×

மயிலாடுதுறையில் இன்று சுற்றுப்பயணம்; திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

செம்பனார்கோவில்: மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை வந்தார். செம்பனார்கோவிலில், அவருக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைதொடர்ந்து செம்பனார்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதைதொடர்ந்து மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவில் நந்தவன வளாகத்தில் திமுக மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் உதயநிதி பங்கேற்றார். அப்போது 500 பெண்களுக்கு தையல் இயந்திரம், 100 பேருக்கு இஸ்திரிபெட்டி, 50 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கி பேசினார். பிற்பகலில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில், இதுவரை நடந்து முடிந்த வளர்ச்சி பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 5 மணிக்கு மயிலாடுதுறையில் பூத் கமிட்டி மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் உதயநிதி பங்கேற்று ஆலோசனை நடத்துகிறார்.

அதேபோல் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் திமுக மூத்த முன்னோடிகள் 720 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. விழாவில் 350 பெண்களுக்கு தையல் இயந்திரம், 500 ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவி வழங்குகிறார். காலை 11.30 மணிக்கு வேளாங்கண்ணியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசனின் சகோதரர் மரிய சூசை நிக்சன் பெயின் திருமணத்துக்கு தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். நாளை நாகை வரும் உதயநிதிக்கு, மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா அருகில் காலை 8 மணிக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

The post மயிலாடுதுறையில் இன்று சுற்றுப்பயணம்; திமுக மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,DMK ,Minister ,Udayanidhi Stalin ,Sembanarco ,Youth Welfare ,Sports Development ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...