×

போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் அதிகாரிகள், சிற்பி மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்பட்டு, கானா பாலாவின் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு மற்றும் “ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்” விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று போதை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வருகிற ஜுன் 26ம் நாள் “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது..

இதன் தொடர்ச்சியாக, இன்று (21.06.2023) காலை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில், போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, காவல் அதிகாரிகள், சிற்பி மாணவ, மாணவியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர்.

பின்னர் “போதைபொருள் பயன்பாட்டை தடுக்க பெரிதும் முன்னிற்க வேண்டியவர்கள்” என்ற தலைப்பில் பட்டிமன்றத்தை J.லோகநாதன், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம், பொறுப்பு: கூடுதல் ஆணையாளர் (தெற்கு) அவர்கள் துவக்கி வைத்தார். பட்டிமன்றத்தின் நடுவராக S.ராஜா தலைமையில் பட்டிமன்ற பேச்சாளர்கள், அருண், மோகனசுந்தரம், அருள்பிரகாசம் மற்றும் இராமலிங்கம் ஆகியோரின் போதை பொருள் தீமைகள் மற்றும் அதனை தடுக்க வேண்டியவர்கள் குறித்து சிறப்பான பேச்சுடன் பட்டிமன்றம் கலகலப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, கானா பாடகர் பாலாவின் போதைக்கெதிரான விழிப்புணர்வு பாடல் குறுங்தகடு, கானா பாலா முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சென்னை காவல்துறையினரின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் தொகுப்புகள் அடங்கிய ‘‘ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்‘‘ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை, கூடுதல் காவல் ஆணையாளர் அவர்கள் வெளியிட்டார்.

மேலும், சென்னை, லயோலா கல்லூரி, மாணவ, மாணவிகளின் போதைக்கெதிரான விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் இணை ஆணையாளர்கள் R.V.ரம்யபாரதி, (வடக்கு மண்டலம்), திஷா மிட்டல், (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், (திருவல்லிக்கேணி), G.கோபி (கீழ்பாக்கம்) உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சிற்பி திட்டத்தின் மாணவ, மாணவியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என சுமார் 1,000 நபர்கள் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் அதிகாரிகள், சிற்பி மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : International Drug Abolition Day ,Tiruvallikeni Police District ,
× RELATED சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை...