×

குழாய்கள் மூலம் ரூ66.67 கோடியில் நீலாங்கரை, செம்மஞ்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கத் திட்டம்

சென்னை: நீண்ட நாள் கோரிக்கையான குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் ரூ.66.67 கோடியில் வரும் 2025ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் நீலாங்கரை பகுதியில் 34,100 குடியிருப்பாளர்கள் மற்றும் செம்மஞ்சேரியில் 51,000 குடியிருப்பாளர்கள் பயன்பெறுவார்கள் என குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய சில பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடிநீர் வழங்குவதற்கான உட்கட்டமைப்பை மேற்கொள்ளப்படும். மேலும் ஓஎம்ஆர் சாலை மற்றும் ஈசிஆர் சாலைகளில் விரிவான குடிநீர் வலையமைப்பை வழங்குவதற்கான திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓஎம்ஆர் சாலையில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ பணிகளை எளிதாக்கும் வகையில் கொட்டிவாக்கம் பகுதிகளில் உள்ள பெரிய குழாய்களை மாற்றி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாற்று நாட்களில் ஒரு நாளைக்கு 4 மில்லியன் லிட்டர் குடிநீர் கொட்டிவாக்கத்திற்கு வழங்கப்படுகிறது என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.66.67 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நீலாங்கரை பகுதிகளில் 34,100 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 2026ம் ஆண்டுக்குள் இந்த திட்டப் பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் முழுமையடையும் போது 5.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். இருப்பினும் நீலாங்கரையின் சில பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் கட்டமைப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதேபோல் செம்மஞ்சேரி பகுதிகளில் ரூ.46 கோடியில் மேற்கொள்ளப்படும் விரிவான நீர்விநியோக கட்டமைப்பு 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதன் மூலம் கிட்டதட்ட 51,000 குடியிருப்பாளர்களுக்கு 7.9 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டியில் 1300 வீடுகளுக்கு நீர் விநியோகம் கிடைத்தாலும், மீதமுள்ள வீடுகளுக்கு இந்த வசதியை விரிவுபடுத்த கட்டமைப்பு தயாராக உள்ளது. இந்த பகுதிக்கு நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் முக்கிய குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ளது.

மேலும் ஒக்கிய துரைப்பாக்கத்தில் இந்த திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐடி வளாகங்களில் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 32 மில்லியன் லிட்டர் நீர் தேவையுடன் திட்டத்தை முடிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐடி வளாகங்களில் பெரிய அளவிலான சம்புகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

The post குழாய்கள் மூலம் ரூ66.67 கோடியில் நீலாங்கரை, செம்மஞ்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கத் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Neelangarai ,Semmancheri ,Chennai ,Dinakaran ,
× RELATED நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண்...