×

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

*முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்ட உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். வருவாய்துறை, வனத்துறை, வேளாண்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, மின்வாரியத்துறை, குடிநீர் வடிகால் வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பலர் கூறியதாவது: ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாற்றில், ஆகாய தாமரை அதிகளவு படர்ந்திருப்பதால், கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால், அதிகாரிகள் அதனை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதுபோல், ஆழியாற்றில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் கலப்பதால், விவசாய தேவைக்காக மட்டுமின்றி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசடைந்து நச்சு தன்மை ஏற்படும் அவலம் உண்டாகும்.

எனவே, ஆழியாற்றில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்தி சுத்தமாக்குவதுடன், கழிவுநீர் கலப்பதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது தேங்காய் விலை கடும் வீழ்ச்சியால், விவசாயிகள் பலர் உரிய லாபமின்றி தவிக்கின்றனர். எனவே, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேங்காய் பருப்பை கொள்முதல் செய்து, அதனை கொப்பரையாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரைக்கான அரசு கொள்முதல் நாட்களை நீட்டிக்க வேண்டும்.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள குவாரி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து கனிமவளம் அதிகளவு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் கிராம பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால், ரோடுகள் சேதமடைகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் கிராமப்புற சாலை வழியாக கனிம வளம் அதிகளவு ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், உள்ளுர் பகுதிக்கு தேவையான களிமவளம் இல்லாமல் போய்விடும். அதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

ஆழியார் அணையிலிருந்து வண்டல் மண்டு எடுக்க நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மழை இல்லாததால், மீண்டும் ஆழியார் அணைப்பகுதி மற்றும் ஆனைமலை அருகே உள்ள குளத்திலிருந்து வண்டல் மண் எடுத்து, விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை ரோடு சக்தி மில்லில் இருந்து ஆர்.பொன்னாபுரம் வழியாக பாலக்காடு ரோடு முத்தூர் வரையிலும் உள்ள மேற்கு புறவழிச்சாலை பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட மேற்கு புறவழிச்சாலை சீரமைப்பு பணியை மீண்டும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Azhiyar ,Pollachi ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...