×

திருக்கனூரில் திடீர் ஆய்வு அரசு பள்ளிக்கு குழந்தைகள் வந்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தப்படும்

*கவர்னர் தமிழிசை பேட்டி

திருக்கனூர் : திருக்கனூர் அருகே உள்ள கொடாத்தூர் அரசு பள்ளியில் நேற்று திடீரென கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை பார்வையிட்டு அதை சாப்பிட்டு பார்த்தார். மாணவர்களிடம் உணவு நன்றாக இருக்கிறதா என்றும் கேட்டார். அதற்கு மாணவர்கள் உணவு நன்றாக இருக்கிறது என்று கூறினர். தொடர்ந்து, வகுப்பறைக்குள் சென்று ஒரு மாணவனின் தாடையில் கை வைத்து, பற்களை காட்ட சொல்லினார்.

அப்போது, மாணவனின் பற்களில் சொத்தை விழுந்து இருந்தது. இதனால் அந்த மாணவனை நன்றாக காலையில் குளித்துவிட்டு பல் துலக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர், அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரை பள்ளியின் துணை முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். பின்னர், பள்ளி வகுப்பறைக்கு சென்ற கவர்னர், அங்கு மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகத்தை பார்வையிட்டு ஆசிரியர்கள் நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்களா என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றனர்.

தொடர்ந்து, 7ம் வகுப்பு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து பள்ளியின் புத்தகத்தில் அட்டை போடவில்லையா என்று கேட்டார். மேலும் அவர்களிடம் நான் யார் என்று தெரிகிறதா? என கேட்டார். அதற்கு மாணவர்கள், தெரிகிறது. நீங்கள் புதுச்சேரி கவர்னர் என்று கூறினர். எனது பெயர் என்ன? என்று கேட்டார். ஒரு சில மாணவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன் என்று கூறினார்கள். அவர்களுக்கு `குட்’ என்று கூறிவிட்டு, புதிதாக கட்டப்படும் கழிப்பறைகளை சென்று பார்வையிட்டார்.

நிறைவாக பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டு பார்த்துவிட்டு, மாணவர்களுக்கும் மதிய உணவை கவர்னரே வழங்கினார். மேலும், மாணவர்களிடம் மதிய உணவுடன் முட்டை போடுகிறார்களா என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் வாரத்திற்கு 2 நாள் முட்டை போடுகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

கூனிச்சம்பட்டு அரசு அண்ணா மேல்நிலைப்பள்ளி பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய பள்ளியாகும். இங்கு மாணவர்களுக்கு எவ்வளவு வசதி உள்ளது என்று ஆய்வு செய்தேன். என்னை பொறுத்தவரை கல்வி அறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கழிப்பறையும் முக்கியம். குழந்தைகளுக்கு நோய் தொற்று வராமல் தடுப்பதற்கு இப்பள்ளியில் பொதுப்பணித்துறை மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மூலம் கழிப்பறை கட்டப்படுகிறது.

அரசு பள்ளிக்கு குழந்தைகள் வந்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தப்படும். மதிய உணவு நன்றாக இருக்கிறது. மாணவர்களும் தங்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார்கள். ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உணவில் புரதச்சத்து இருக்க கொண்டை கடலை, பட்டாணி சேர்க்க வேண்டும் என கூறியிருந்தேன். அதன்படி, உணவில் கொண்டை கடலை, பட்டாணி சேர்த்துள்ளார்கள். இது ஆரோக்கியமான விஷயம். வேறு என்ன பிரச்னை இருந்தாலும் களையப்படும். சில பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்த வேண்டும் என கூறியுள்ளேன். டிஜிட்டல் வகுப்பறை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருக்கனூரில் திடீர் ஆய்வு அரசு பள்ளிக்கு குழந்தைகள் வந்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Thirukanur ,Governor Tamilisai ,Kodathur Government School ,
× RELATED பிறந்து 5 நாட்களில் இறந்த பச்சிளம்...