×

ஆட்டை மீட்க சென்ற முதியவரும் கிணற்றுக்குள் சிக்கினார்

*பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்

போடி : போடி அருகே சிலமலையில் குடியிருப்பவர் பூபதி (53). இவர் சிலமலை பெருமாள் கோயில் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதை பார்த்த பூபதி உடனடியாக ஆட்ைட மீட்க கிணற்றுக்குள் இறங்கினார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால், ஆட்டுடன் மேலே வர முடியாமல் திணறினார். தகவலறிந்த வந்த போடி தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஆடு மற்றும் பூபதியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் கூறியதாவது, மழைக்காலங்களில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றனர். தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்தாலும், சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும். அதுபோல், வீடு, தோட்டங்களில் வளர்க்கப்படும் கால்நடைகைளயும் முறையாக பராமரிக்க வேண்டும். தோட்டங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது கவனமாக கால்நடைகளை கண்காணிக்க வேண்டும்’’ என்றனர்.

The post ஆட்டை மீட்க சென்ற முதியவரும் கிணற்றுக்குள் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Bhupathi ,Silamalai ,Silamalai Perumal ,Dinakaran ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்