×

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனை நினைத்து துக்கம் தாளாமல் காசிக்கு ஜல சமாதி அடைய சென்ற சென்னை பெண் அதிரடியாக மீட்பு

சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனை நினைத்து, துக்கம் தாளாமல் உருக்கமான கடிதம் எழுதிவைத்து விட்டு காசிக்கு ஜல சமாதி அடைய சென்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு தண்டையார்பேட்டை போலீசார் மீட்டனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சிஎம். கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(48). இவர் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவரின் மனைவி வித்யா(எ) ஜெயஸ்ரீ (43). இவர்களுக்கு 21 வயதில் ஸ்ரீவர்ஷோ என்ற மகனும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவர்ஷோ கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை குடும்பத்தினர், உறவினர்கள் என பலர் நினைவு தினம் அனுசரித்தனர். இதன்பின்னர் மகனின் ஞாபகத்திலேயே இருந்துவந்த தாய் வித்யா கடந்த 19ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஒரு பையுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கணவர் உள்பட அனைவரும் அவரை தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, தண்டையார்பேட்டை ஆய்வாளர் ராஜன் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், வீட்டில் மனைவி எழுதிவைத்துள்ள ஒரு கடிதம் இருப்பதை சதீஷ் பார்த்தார். பின்னர் அந்த கடிதத்துடன் காவல்நிலையத்துக்கு வந்து ஆய்வாளரிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் வித்யா, தனது மகனை பிரிந்து வாழமுடியாது.

எனவே, அவன்போன இடத்திற்கே போக விரும்புவதாகவும் மகளை அழ வேண்டாம் என்றும் மகள் தான் தந்தையை பார்த்து கொள்ள வேண்டும்’ என்றும் உருக்கமாக எழுதிவைத்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வித்யா, அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து தியாகராஜா மெட்ரோ ரயில் நிலையம் செல்வது பதிவாகியிருந்தது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்வது தெரிந்தது.

இதையடுத்து ஆய்வாளர் ராஜன் தலைமையில் போலீசார், சென்ட்ரல் ரயில்வே போலீசாரின் உதவியுடன் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவை பார்த்தபோது 9 வது கவுண்டரில் டிக்கெட் எடுத்துகொண்டு 7வது பிளாட்பாரம் சென்று அங்கு வந்த கங்கா, காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது தெரிந்தது. இதனிடையே வித்யா தனது உறவினர் ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும்போது, ‘’பயணம் செய்யும் ரயில் இருக்கை எண் மற்றும் கங்கை நதிக்கு சென்று ஜலசமாதி அடைய போவதாக கூறியுள்ளார்.

இந்ததகவலை உறவினர் வித்யாவின் கணவருக்கு தெரிவித்ததும் அவர் உடனடியாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்து விவரத்தை தெரிவித்தபோது, அவர் தாம் பரிசோதனை செய்யும் இடம் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு நாக்பூருக்கு ஒரு டிடிஆர் செல்வார் அவரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரித்து நாக்பூரில் இருந்த பெண் அதிகாரிகளின் உதவியுடன் வித்யாவை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது மகன் இறந்த வேதனை தாங்க முடியாமல் காசியில் ஜலசமாதி அடைய சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த தகவல் வித்யாவின் கணவருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதால் அவர் விமானம் மூலம் நாக்பூருக்கு சென்றுள்ளார்.

The post உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனை நினைத்து துக்கம் தாளாமல் காசிக்கு ஜல சமாதி அடைய சென்ற சென்னை பெண் அதிரடியாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kashi ,Jala Samadhi ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...