×

முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து துளியும் வருத்தம் இல்லை: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

பர்மிங்காம்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே 5போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நடந்து வந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 281 ரன் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 36, லாபுசேன் 13, ஸ்மித் 6 ரன்னில் அவுட் ஆகினர். கடைசி நாளான நேற்று 174ரன் தேவைப்பட்ட நிலையில் போலண்ட் 20, டிராவிஸ் ஹெட் 16, கேமரான் கிரீன் 28 ரன்னில் ஆட்டம் இழக்க மறுமுனையில், தனி நபராகபோராடிய உஸ்மான் கவாஜா 65 ரன்னில் போல்டானார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 20 ரன்னில் வெளியேற கேப்டன் கம்மின்ஸ்-நாதன் லயன் ஜோடி சிறப்பாக ஆடி வெற்றி தேடித்தந்தது. 92.3 ஓவரில் 8 விக்கெட் இழந்து 282 ரன் எடுத்து ஆஸி. 2விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பேட் கம்மின்ஸ் 44, நாதன் லயன் 16 ரன்னில் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் 141, 2வது இன்னிங்சில் 65 ரன் எடுத்த கவாஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் வரும் 28ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. வெற்றிக்கு பின் ஆஸி.கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: கவாஜா சிறப்பாக பேட் செய்தார். லயன் 2 இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசினார். அவர் 120 டெஸ்ட்டில் ஆடி உள்ளார். முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு சூப்பர் ஸ்டார், என்றார்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “போட்டியை கடைசி வரை எடுத்து சென்று போராடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து பரபரப்பாக என்ன நடக்கும்? என்று ரசிக்கவில்லை என்றால் மட்டுமே நான் ஆச்சரியமாக உணர்வேன். அப்படி ஒரு கிரிக்கெட்டை 5நாட்களும் வெளிப்படுத்தினோம். தோல்வி என்பது தோல்விதான். ஆனாலும் தொடர்ந்து இதேபோல அணுகுமுறையை மட்டுமே வெளிப்படுத்துவோம். முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து எனக்கு துளியும் வருத்தம் இல்லை. ஆண்டர்சன் களத்தில் இறங்கி 20 நிமிடம் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் ஆஸ்திரலியா மீது அழுத்தம் கொடுத்து சான்ஸ் எடுக்கலாம் என நினைத்தேன் ” என்றார்.

The post முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து துளியும் வருத்தம் இல்லை: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Drill ,England ,Ben Stokes ,Birmingham ,Ashes ,UK ,Australia ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடரில்...