×

செல்போனில் பேசியதால் 2வது மனைவியை மண்வெட்டியால் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை

*ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு : செல்போனில் இரவு நேரத்தில் வேறு நபர்களுடன் பேசுவதை நிறுத்தாத 2வது மனைவியை ஆத்திரத்தில் மண்வெட்டியால் சரமாரியாக தாக்கி கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் கள்ளியூர் டேங்க் தோட்டத்தை சேர்ந்தவர் தர்மன் (51). டிப்பர் லாரியை வாடகைக்கு பிடித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி கமலா. இவர்களது மகன் விஜய் (23). இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், மனவேதனையில் கமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தர்மன், மூங்கில்பட்டியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மாரசாமி மகள் விஜயசாந்தி (24) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜயசாந்தி திருமணத்திற்கு பிறகு பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனை அறிந்த தர்மன் விஜயசாந்தியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி இரவு தர்மன், விஜயசாந்தி, குழந்தை மூவரும் சாப்பிட்டு தூங்கினர். இதையடுத்து மறுநாள் (30ம் தேதி) அதிகாலை விஜயசாந்தி வீட்டின் வளாகத்தில் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த, தர்மன் விஜயசாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், விஜயசாந்தி கோபத்தில் வீட்டில் இருந்த சொம்பினை எடுத்து தர்மன் மீது வீசிவிட்டு கதவை உள்பக்கம் தாழ் போட்டு கொண்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த தர்மன், வீட்டின் வெளியே கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து கதவை உடைத்து, விஜயசாந்தியின் தலையில் மண்வெட்டியால் தாக்கினார். தொடர்ந்து, தலை மற்றும் முகத்தில் வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜயசாந்தி உயிரிழந்தார். பின்னர் தர்மன், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆஜரானார்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து, தர்மனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று வழக்கின் இறுதி விசாரணையை முடித்து, மனைவியை கொலை செய்த தர்மனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.

The post செல்போனில் பேசியதால் 2வது மனைவியை மண்வெட்டியால் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Erodu ,Erode ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு