×

மீன்பிடி தொழிலாளர்கள் ஸ்டிரைக் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி வெறிச்சோடியது

*கரையில் காத்திருக்கும் பரிசல்கள்

சத்தியமங்கலம் : தனியாருக்கு மீன் பிடி உரிமத்தை வழங்கக்கூடாது என வலியுறுத்தி மீன்பிடி தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி வெறிச்சோடியது. தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி 32 சதுர கிலோ மீட்ட பரப்பளவு உடையது. பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் மீன் பிடிக்கும் பணியில் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கங்களை சேர்ந்த 622 பங்கு மீனவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அணையில் மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு விடப்பட்ட டெண்டர் நேற்று முன்தினம் 19ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்து மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மீன்பிடி உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தி நேற்று முதல் அணை நீர்த்தேக்க பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மீனவர்கள் தரப்பில் கூறியதாவது: பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகையில் உள்ள 2 மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவின்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தோம்.

இதற்கிடையே தனியாருக்கு வழங்கப்பட்ட மீன்பிடி உரிமம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் அதே நிறுவனத்திற்கு மீண்டும் 2 மாத காலம் மீன் பிடித்து கொள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் கால நீட்டிப்பு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தனியாருக்கு மீன்பிடித்து கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன் விற்பனையில் ஈடுபட்டால் மட்டுமே மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

The post மீன்பிடி தொழிலாளர்கள் ஸ்டிரைக் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Bhavanisakar Dam ,Strike Bhavanisakar Dam ,Sathyamangalam ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...