×

மகிழ்ச்சியடைந்த மக்கள் திருச்சியில் 298 கி.மீ தூரம் புதிய தார்சாலை பணி ர103 கோடியில் விரைவில் துவக்கம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 298 கி.மீ தூரம் புதிய தார்சாலை அமைக்கும் பணி ரூ. 103 கோடியில் விரைவில் துவங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து உள்ளார். திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களை அரசு நிதி பெற்று நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சி மாநகரை அழகுபடுத்தி குப்பையில்லாத நகரமாக்க மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் படி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகரம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மாநகரில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டக்கூடாது என்பதற்காக முக்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில் போஸ்டர் ஓட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாநகரில் உள்ள மேம்பாலங்கள் மின்னொளியால் மின்னி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவிற்கேற்ப விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநகராட்சியின் சாதாரண, அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தார்சாலைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் 630 கிமீ தூரம் அளவிற்கு பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்னும் சில தினங்களில் பருவ மழை துவங்கவுள்ள நிலையில், மாநகராட்சி பகுதியில் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி டூரிப் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ரூ.103 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் முயற்சியால் பெறப்பட்ட நிதியின் மூலம் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதிய தார் சாலை அமைக்கும் நடவடிக்கையாக பல்வேறு தொகுப்பாக பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் கூறுகையில், 2023-2024-ம் ஆண்டிற்கான திட்ட தொகுப்பில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.103 கோடி பெறப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளில் சுமார் 298 கிமீ அளவிற்கு புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவங்கும் என்றார்.

 

The post மகிழ்ச்சியடைந்த மக்கள் திருச்சியில் 298 கி.மீ தூரம் புதிய தார்சாலை பணி ர103 கோடியில் விரைவில் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Corporation ,Tharsala ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...