×

கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டி விஐடி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

திருப்போரூர்: நார்வே நாட்டில், கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டி நடந்தது. அதில், சென்னை விஐடி மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். விஐடி சென்னையில், மாணவர்கள் தொழில் நுட்பங்களை கற்று நிபுணத்துவம் அடைய தொழில் நுட்ப சிறப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சிறப்பு குழுக்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றன. இந்த வகையில், நார்வேயின் ரோகாலாந்தில் உள்ள டவ் தன்னாட்சி மையம் (TAU Autonomy Center) நடத்திய கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டிகள் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 13ம் தேதி வரை நடந்தது.

இதில், விஐடி சென்னையின், ‘தி ட்ரெட்நாட் ரோபோட்டிக்ஸ்’ (The Dreadnought Robotics) அணியின் 18 பேர் கொண்ட மாணவர் குழு, முனைவர் கருணாமூர்த்தி தலைமையில் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டிகளில், 13 சர்வதேச அளவிலான அணிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடலுக்கு அடியில் எண்ணெய் குழாய் ஆய்வு செய்தல், பொருட்களை அடையாளம் காண்பது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்ற ஒரே அணி விஐடி சென்னை அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில், சிறப்பாக செயல்பட்டு விளக்கவுரையில் 4வது இடத்தையும், கடலுக்கு அடியில் எண்ணைக்குழாய் ஆய்வு செய்வதில் 5வது இடத்தையும், பொருந்தும் நிலையத்தில் வந்தடைவதில் 6வது இடத்தையும், கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை அடையாளம் காண்பதில் 7வது இடத்தையும் விஐடி சென்னை அணி பிடித்தது. இது குறித்து குழு ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி கூறுகையில், போட்டியில் பங்கேற்றது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக அமைத்ததாகவும், வரவிருக்கும் நிகழ்வுகளில் விஐடி சென்னை மாணவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் பெற்ற அனுபவம், கடல் அடியில் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் புதிய பரிமாணத்தை வகுக்க உதவும். மேலும், இத்தகைய பங்கேற்புகளை ஆதரிக்கும் விஐடி பல்கலைக்கத்தின் அனைத்து நிர்வாக அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

The post கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டி விஐடி மாணவர்கள் பங்கேற்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : VIT ,Tirupporur ,Norway ,Chennai VIT ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…