×

கருங்குழி பேரூராட்சியில் மேலவலம்பேட்டை ஏரி நீர்வரத்து கால்வாயை தூர் வாரவேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் உள்ள மேலவலம்பேட்டை ஏரிக்கான நீர்வரத்து கால்வாயை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலவலம்பேட்டை விவசாய பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலமாக அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கான நீர்வரத்து பெரும்பாலும் மதுராந்தகம் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மூலமாக இந்த ஏரி நிரம்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர்வரத்து கால்வாய்கள் புதிய குடியிருப்பு கட்டுமானங்கள் காரணமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன.

இதனால், இந்த ஏரிக்கு சென்றடைய வேண்டிய தண்ணீர் வருவதில்லை. இதனால், அதிக மழை பெய்யும் காலங்களில் கூட இந்த ஏரியானது முழுமையாக நிரம்பாமல் சில அடி தண்ணீர் மட்டுமே நிரம்பி இருக்கும் சூழல் கடந்த சில ஆண்டுகளாக இருக்கிறது. இதனால், இந்த ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி ஏரியில் நீர் நிரம்பி இருப்பின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். அப்போது, குடியிருப்பு வாசிகளுக்கு அவர்களின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றில் சுலபமாக தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாறிவிட்டது.

இதனால், பொதுமக்களுக்கும் போதிய தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. எனவே, தற்போது மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் உயர்மட்ட கால்வாயின் வழியாக செல்லும் நீரை இந்த ஏரிக்கு கொண்டு சென்று இந்த மேலவலம்பேட்டை ஏரியானது முழுமையாக நிரம்பி பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் மதுராந்தகம் வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எதிர்வரும் மழை காலத்திற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கருங்குழி பேரூராட்சியில் மேலவலம்பேட்டை ஏரி நீர்வரத்து கால்வாயை தூர் வாரவேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Melawalampet Lake ,Karunkuzhi Municipal Corporation ,Madhurantagam ,Melawalampettai Lake ,Karunkuzhi ,Mevalampettai lake ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்