×

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்: 229 நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் இன சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

திருவள்ளூர்: நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் இன மக்கள் எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டு சாதி சான்றிதழ் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் ஆகிய இனங்களை எஸ்டி பிரிவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற ஒன்றிய அரசு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் ஆகிய இனங்களை எஸ்டி வகுப்பில் இணைத்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.

இந்த சட்டத்தை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஏற்கனவே வழங்கிய எம்பிசி சான்றிதழை மாற்றி எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், எஸ்டி மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 1,191 பேரும் மாநிலம் முழுவதும் 42 ஆயிரம் பேரும் பயன்பெறுவார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் திருவள்ளூர், பெரியகுப்பத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு வட்டாட்சியர் என்.மதியழகன் தலைமை தாங்கினார்.

மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலரகள் பிரதீப், காதர் நிஷா பேகம், கவுன்சிலர் தனலட்சுமிஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் கீழ் வசித்து வரும் இடத்திற்கே சென்று, நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான எஸ்டி சான்றிதழ் வழங்குவதற்காக, ஆதார் கார்டு உள்பட ஆவணங்கள் பெறப்பட்டது. பின்னர், 26 மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதேப்போல், திருவள்ளூர் வட்டம், அதிகத்தூரில் நடைபெற்ற முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் லில்லி ஒயிட் தலைமை தாங்கினார்.

வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா, கிராம நிர்வாக அலுவலர் மோகனா ஆகியோர் 103 மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். மேலும், அம்மனம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் வரதராஜன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி ஆகியோர் 100 மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். திருவள்ளூர் வட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற முகாமில் 229 நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் இன சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாகவும், மேலும் 12 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் வட்டாட்சியர் என்.மதியழகன் தெரிவித்தார்.

The post நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்: 229 நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் இன சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Narians ,Kurds ,Thiruvallur ,India ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்