×

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை கொடுத்து ரூ.40 லட்சம் மோசடி: தென்காசி பாஜ நிர்வாகி கைது

தென்காசி: சிபிசிஐடியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் நேற்று முன்தினம் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அங்கு வேலை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பி இங்குள்ள வேலைகளை செய்து வந்த நிலையில் தன்னை செங்கோட்டை நகர பாஜ பொதுச் செயலாளர் பாலா என்ற பாலகிருஷ்ணன் (40) அணுகி, நீ போலீஸ் போன்ற தோற்றத்தில் உள்ளாய், தற்போது தமிழக சிபிசிஐடி காவல்துறையில் புதிதாக நுண்ணறிவு உளவு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது, அதற்கு ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது, எனக்கு சில ஐபிஎஸ் அதிகாரிகள் நெருக்கமானவர்கள், அவர்கள் மூலம் அந்த பணியில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி ரூ.40 லட்சம் பெற்றார்.

தொடர்ந்து, ஒரு வாரத்தில் தன்னை அழைத்து சிபிசிஐடி உளவுப் பிரிவில் சார்பு ஆய்வாளராக நியமித்துள்ளதாக ஒரு பணி நியமன ஆணை வழங்கினார். அது போலி பணி நியமன ஆணை என்பது பின்னர் தெரியவந்தது. மறுபடியும் அவரிடம் அதுபற்றி கேட்டபோது என்னை மிரட்டும் தொணியில் பேசினார். தொடர்ந்து, நான் என் குடும்பத்துடன் சென்று என் பணத்தை கேட்ட போது பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித் தர முடியாது எனக்கூறி மிரட்டினார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து எஸ்பி சாம்சன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் குறித்து அவதூறு கோவை பாஜ பெண் உறுப்பினர் கைது
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ் அளித்த புகாரில், ‘‘கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பாஜ உறுப்பினர் உமா கார்கி (50) என்பவர் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் திமுகவினர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவர் காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்களில் பெரியார் மற்றும் மணியம்மை குறித்து தவறாக சித்தரித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். எனவே அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வரும் உமா கார்கியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்து இருந்தார். இதேபோல் நடிகர் விஜய் குறித்தும் இவர் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து உமா கார்கியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை காளப்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு விழாவில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருதை உமா கார்கிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

The post சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை கொடுத்து ரூ.40 லட்சம் மோசடி: தென்காசி பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : CBCIT ,Tenkasi ,BJP ,CBCID ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...