×

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.கே நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் 16 கால்வாய்கள் உள்ளன. இதில் முக்கிய கால்வாய்களாக கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் கருதப்படுகிறது. இந்த கால்வாய்களை இணைக்கும் விதமாக 13 சிறு சிறு கால்வாய்கள் உள்ளன. ஆர்கே நகர் தொகுதியில் 38, 41, 47 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, பட்டேல் நகர், தமிழன் நகர், நேரு நகர், சுண்ணாம்பு கால்வாய், அம்பேத்கர் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகள் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அமைந்துள்ளன. அதேபோல் பெரம்பூர் தொகுதியில் 34, 35, 37 ஆகிய வார்டுக்கு உட்பட்ட ஆர்ஆர் நகர், முல்லை நகர், கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர் ஆகியவை கேப்டன் காட்டன் கால்வாயை ஒட்டி அமைந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் இந்த பகுதியில் இருந்து மழைநீர் பக்கிங் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாயில் சேர்கிறது. இதனால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிகிறது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் மழை நீர் தாழ்வான பகுதியான 38வது வார்டுக்கு உட்பட்ட தமிழன் நகர், பட்டேல் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் புகும் அபாயம் உள்ளது. இந்த பக்கிங்காம் கால்வாய் மூலக்கொத்தளத்தில் இருந்து எண்ணூர் வரை உள்ளது. இதனை தூர்வாரினால் மழைக்காலங்களில் இந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படாது. ஒருநாள் மழைக்கு கால்வாய் நிரம்பி வழிகிறது. இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது தூர்வாராமல் கிடப்பில் உள்ள இந்த கால்வாயால் இந்தப் பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துவிடும்.

இந்த கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பருவமழை தொடங்கும் முன்பே பக்கிங்காம் கால்வாயை தூர்வாரினால் ஆர்கே நகர் பகுதியில் மழை பாதிப்பு ஏற்படாது. இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு மழை காலம் வருவதற்கு முன்பே முக்கிய கால்வாய்களை தூர் வாருவார்கள். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகாமல் கால்வாயில் செல்லும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளில் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல் ஒரு நிகழ்வு இனி ஏற்படாமல் இருக்க பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்,’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டுமென்று சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்,’’ என்றார்.

The post ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Buckingham ,Canal ,RK ,Nagar ,Thandaiarpet ,RK Nagar ,Perambur ,Chennai Corporation ,Buckingham Canal ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...