×

ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் திறந்தார்

திருவாரூர்: திருவாரூரில் ரூ.12 கோடியில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்ட முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கலைஞர் சிலை, முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளை போற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த வளாகத்தில் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும். இந்த திருவாரூரின் சிறப்பை குறிக்கும் வகையில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டம் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கல இசையுடன் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை படித்தனர். பின்னர் ‘‘மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே’’ என்ற தலைப்பில் நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதா ஜவகர், ராஜா, எழுத்தே என்ற தலைப்பில் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினர். கவியரங்கம், பட்டிமன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

பிற்பகல் 3.30 மணிக்கு மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெற்றது. இதையடுத்து கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். இதையடுத்து, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். இதில் அவருக்கு புகைப்படங்கள் குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

கலைஞருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எடுத்துக் கொண்டார். பீகார் துணை முதல்வருடன், பீகார் நீர்வளத்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் குமார் ஜாவும் வந்திருந்தார். விழாவில் தேஜஸ்வி யாதவ், சஞ்சய் குமார் ஜா, அமைச்சர் எ.வ.வேலு, தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள், கலைஞர் சிலை சிற்பி உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கலைஞர் ஜோதி ஓட்டம் கடந்த 17ம் தேதி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து புறப்பட்டது. இந்த ஜோதி திருவாரூர் கலைஞர் கோட்டத்துக்கு நேற்று காலை வந்தடைந்தது. சன்னதி ெதரு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த ஜோதியை, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா ஆகியோர் முன்னிலையில் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.

* 4 ஜோடிகளுக்கு திருமணம்
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், நேற்று 4 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், மூன்று ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார். ஒரு ஜோடிக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, விழா மேடைக்கு வந்த பீகார் துணை முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.

* ஒவ்வொரு இருக்கையிலும் புத்தகம், விசிறி, தண்ணீர்
விழா பந்தலில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமரும் வகையில் சேர்கள் போடப்பட்டது. ஒவ்வொரு சேரிலும் ஒவ்வொரு பை வைக்கப்பட்டது. அந்த பைகளில் ஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில் என்ற தலைப்பிலான புத்தகம், விசிறி, வாட்டர் பாட்டில், டிஸ்யு பேப்பர் வைக்கப்பட்டிருந்தது

* மனு வாங்கிய முதல்வர்
திருவாரூர் சன்னதி தெரு இல்லத்திலிருந்து நேற்று காலை 9.20 மணிக்கு முதல்வர் காட்டூர் புறப்பட்டபோது போலீசாரின் மரியாதையை ஏற்றார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த 50க்கும் மேற்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் 10 மணிக்கு கலைஞர் கோட்டத்துக்கு வந்து விழாவில் பங்கேற்றார். அவருடன் அவரது மனைவி துர்கா, சகோதரி செல்வி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

* 7 அடி உயர பீடத்தில் கலைஞர் சிலை
கலைஞர் கோட்டத்தில் உள்ளே நுழைந்தவுடன் ஹாலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கோட்டத்தின் வாயிலில் நின்று பார்த்தாலே தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 7 அடியில் பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல் ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களால் கலைஞர் அமர்ந்து பேனா பிடித்து எழுதுவது போல் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளை போற்றும் பழைய புகைப்படங்கள், கலைஞரின் இளமைக்கால அரசியல், பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா மற்றும் திராவிட இயக்க தலைவர்களோடு கலைஞர் ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கலைஞர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைஞரின் வாழ்க்கை வரலாறு படங்கள், குறும்படங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவாயிலில் டிக்கெட் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது.

The post ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் திறந்தார் appeared first on Dinakaran.

Tags : Kalayan Kottam ,Chief Minister ,M.K.Stalin ,Muthuvelar Library ,Bihar ,Deputy Chief Minister ,Tiruvarur ,Artist ,Kotham ,Muthuvelar ,Library ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...