×

கார்பன் உமிழ்வை குறைக்காவிட்டால் 80 சதவீத பனிப்பாறைகளை இமயமலை இழக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ‘கார்பன் உமிழ்வை தீவிரமாக குறைக்காவிட்டால், வரும் 2100ம் ஆண்டுக்குள் இந்து குஷ் இமயமலைப் பிராந்தியம் தனது 80 சதவீத பனிப்பாறைகளை இழந்துவிடும்’ என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. எவரெஸ்ட் உள்ளிட்ட உலகின் மிக உயரமான மலைத் தொடர்களை கொண்ட இந்து குஷ் இமயமலைப் பகுதி, வட, தென் துருவங்களுக்கு வெளியே பூமியில் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகளை கொண்ட பகுதியாகும். இந்த பனிப்பாறைகள், பனி மூடிய மலைகள் 12 ஆறுகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆறுகள் மூலம் 24 கோடி மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர்.

42 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட இந்துகுஷ் இமயமலை பிராந்தியம் தற்போது வேகமாக தனது பனிப்பாறைகளை இழந்து வருவதாக காத்மாண்டுவை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த மலை அபிவிருந்தி சர்வதேச மைய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் விரைவாக உருகி, கடுமையான வெள்ளம் மற்றும் பனிச்சரிவுகள் ஏற்படும் என்றும், இதனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சுமார் 200 கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

2000 முதல் 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-2019ம் காலகட்டத்தில் பனிப்பாறைகள் 65 சதவீதம் வேகமாக உருகி உள்ளன. எனவே, புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக இருந்தால் 2100ம் ஆண்டுக்குள் இந்து குஷ் இமயமலை பனிப்பாறைகள் 30 முதல் 50 சதவீதம் வரையிலும் பனியை இழக்கும். அதுவே, புவி வெப்பமடைதல் அதிகமாக இருந்தால் 55 சதவீதம் முதல் 80 சதவீத பனியை இழக்கும் அபாயம் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2015ம் ஆண்டில் பாரிஸில் நடந்த பருவநிலை மாநாட்டில், அழிவுகர விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.

The post கார்பன் உமிழ்வை குறைக்காவிட்டால் 80 சதவீத பனிப்பாறைகளை இமயமலை இழக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Himalayas ,New Delhi ,Hindu Kush Himalayan region ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு