×

அட்லாண்டிக் ஆழ்கடலில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்கும் சாகச பயணம் விபரீதமானது

லண்டன்: அட்லாண்டிக் ஆழ்கடலில் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்க்கச் செல்லும் சாகச பயணம் விபரீதத்தில் முடிந்துள்ளது. ஆழ்கடலுக்கு சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயமாகி உள்ளது. கடந்த 1912ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்ற பிரமாண்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து மூழ்கியது. இந்த சிதைவுகளை பார்க்க 8 நாள் சுற்றுலா அழைத்துச் செல்வதாக ஓசன்கேட் எக்ஸ்பிடிசன் என்ற நிறுவனம் அறிவித்தது. இதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 2 கோடி.

ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த இங்கிலாந்து தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலதிபர் ஷஜாதா தாவூத், அவரது மகன் சுலேமான் உள்ளிட்ட 5 பேர் இந்த சாகச பயணத்தில் பயணிக்க பதிவு செய்திருந்தனர். அதன்படி கடந்த 18ம் தேதி டைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கி மூலம் 5 பேரும் கனடாவின் நியூபவுண்ட்லேண்ட் மாகாணம், செயின்ஸ் ஜான்ஸ் நகரில் இருந்து அட்லாண்டிக் ஆழ்கடல் சாகச பயணத்தை தொடங்கினர். நீர்மூழ்கி கடலில் மூழ்கிய அடுத்த 1 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டித்தது. இதனால், நீர்மூழ்கி எங்கிருக்கிறது, அதில் உள்ள 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்த நீர்மூழ்கியை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா கடற்படை உதவியுடன் ஓசன்கேட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விவகாரம் சாகச பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* சிவிங்கி புலி வர உதவியவர்

இங்கிலாந்து தொழிலதிபரான ஹமிஷ் ஹார்டிங் சாகச பிரியர். இவர் பனி படர்ந்த தென் துருவத்திற்கு பலமுறை சாகச பயணம் சென்று வந்துள்ளார். 2022ல் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் 5வது மனித விண்கலம் மூலம் விண்வெளி பயணம் சென்று வந்தார். மரியானா அகழியின் ஆழமான பகுதிக்கு சென்று அதிக நேரம் செலவிட்டது உட்பட 3 உலக சாதனையும் நிகழ்த்தி உள்ளார். சமீபத்தில் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை கொண்டுவரும் திட்டத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அட்லாண்டிக் ஆழ்கடலில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்கும் சாகச பயணம் விபரீதமானது appeared first on Dinakaran.

Tags : Atlantic Ocean ,London ,Atlantic ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை