×

சிறுகதை-பிரசவத்துக்கு இலவசம்

நன்றி குங்குமம் தோழி

‘‘பூரணி…” என அழைத்த படியே வந்து கொண்டிருந்தாள் சிவகாமி. பக்கத்து வீட்டுப் பெண்மணி. பூரணியின் தோழி.பெரிய சூட்கேஸில் தன் உடமைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணி நிமிர்ந்தாள். “சிவகாமியா? உள்ளே வா” என்றாள். உள்ளே வந்த சிவகாமி அங்கிருந்த சோபாவில் அமிர்ந்தவாறே அந்த இடத்தை
கண்களால் அளந்தாள். “என்ன பூரணி அமெரிக்க பயணத்துக்கு எல்லாம் பேக் பண்ணிட்டியா?’’

“ஆமா… சிவகாமி தயாராயிட்டேன். பேக்கைத் தூக்கிக்கிட்டு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கணுமோ அதையெல்லாம் செட்டில் பண்ணிக்கிட்டிருக்கேன். பால் காரம்மாவுக்கு கொடுக்கணும். பூக்கார கிழவிக்கு கொடுக்கணும். பேப்பர் போடற பையனுக்கு கொடுக்கணும்..அவங்களை எதிர்பார்த்துதான் காத்துக்கிட்டிருக்கேன்.”“ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கே போலிருக்கு… முகமே பத்து வயசு குறைஞ்ச மாதிரி காட்டுது…” சிவகாமி பூரணியின் முகப்பொலிவை ரசித்தவாறே
கேட்டாள்.“இருக்காதா பின்னே? எத்தனை வருஷக் கனவு? முதல் டெலிவரிக்கே போகணும்னு துடிச்சேன். முடியலை. மருமக மாலினி அவ அம்மாவை கூட்டிக்கிட்டா… இப்பவாவது போக சான்ஸ் கிடைச்சுதே…” நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் பூரணி.

சிவகாமி அலட்சியமாக சிரித்தாள். அந்த சிரிப்பு பூரணியை கேவலப்படுத்துவதை போலிருந்தது. “என்ன சிரிக்கறே..?”“ஒண்ணுமில்லை” என்று சிவகாமி சொன்னாலும் அவள் ஏன் சிரிக்கிறாள் என்று பூரணிக்குத் தெரியும். அந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக “இரு. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். தப்பித்த உணர்வு உண்டானது. ஆனாலும் சிவகாமி விடவில்லை. காபியோடு பூரணி வந்த போது ஒரு கோப்பையை வாங்கிக் கொண்டவள், “உன்னைப் பார்த்தா ஆட்டோவின் பின்னால ஒரு வாசகம் எழுதி வச்சிருப்பாங்களே அதான் ஞாபகம் வருது” என்று சொல்லிவிட்டு இன்னும் வாய்விட்டு சிரித்தாள்.

அவளை புரியாமல் பூரணி பார்த்தாள்.“என்ன புரியலையா? பிரசவத்துக்கு இலவசம்னு ஆட்டோவ்லயெல்லாம் எழுதி வச்சிருப்பாங்கள்ல. அது மாதிரி நீ ஒரு ஆட்டோ… பிரசவத்துக்கு இலவசம்”…சிவகாமியை எரிச்சலாகப் பார்த்தாள் பூரணி. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அமைதியாக காபியை உறிஞ்சினாள். “இந்த தடவை மாலினியோட அம்மா கீழே விழுந்து காலை உடைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரியில கிடக்கா. இல்லாட்டி உன்னை கூப்பிடுவாங்களா? நீயும்தான் உன் புள்ளையோட போய் இருக்கணும்னு அவ்வளவு ஆசைப்படறே? உன் புள்ள ஏதேதோ காரணம் சொல்லி உன்னை கூட்டிக்கிட்டுப் போகாம இங்கே தனியா விட்டுட்டான். இப்ப அவங்களுக்குத் தேவை. அதான் கூப்பிடறாங்க. நம்மோட தேவை இருந்தா மட்டும்தான் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நாம தேவை. இல்லாட்டி நாம குப்பை மாதிரி…”சிவகாமியின் கூற்று பூரணிக்கு ஒரு மாதிரியாகயிருந்தாலும் உண்மை அதுதானே. ஜீரணித்துக் கொள்ள சிரமமாகத்தான் இருந்தது.

பூரணிக்கு ஒரே மகன். உயிரையே அவன் மீது வைத்திருக்கும் சராசரி தாய் அவள். உலகமே அவன்தான். இளம் வயதிலேயே இழந்துவிட்ட கணவரைக் கூட நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்தவள். கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து காசு சேர்த்து அவனுக்கு கல்வி கொடுத்தவள். அம்மா படும் துன்பங்களைப் பார்த்து ‘அம்மா நான் பெரியவனாகி பெரிய வேலைக்குப் போய் உன்னை நல்லா பார்த்துப்பேன்’… சின்னஞ்சிறு வயதிலேயே இப்படி சொன்னவன்.

சொன்ன சொல்லிலிருந்து அவன் மாறவில்லை. அமெரிக்காவில் கைநிறைய சம்பளம். மாதா மாதம் தவறாமல் பணம் அனுப்புகிறான்.அவள் விரும்புவது அதையா?
அவளுடைய உலகம் அவன்தானே. அந்த உலகத்திற்குப் போய்விடத் துடிக்கிறாள். ‘என்னால தனியா இருக்க முடியலைப்பா. சின்ன புள்ளையிலேர்ந்து உன்னை விட்டு ஒரு நாள் கூட இருந்ததில்லை. என்னைக் கூட்டிக்கிட்டுப் போப்பா’…ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்தான். திருமணத்திற்குப் பிறகு மாலினி கர்ப்பமாகயிருந்த போது கனவு வளர்த்தாள் பூரணி. அவளுடைய பிரசவத்திற்கு தான் அமெரிக்கா போய்விடுவதாய்… பேரப் பிள்ளையை கவனித்துக் கொள்ளப் போவதாய்… அனைவரிடமும் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஆனால் அவன் அழைத்துக் கொண்டதோ மாலினியின் தாயை.

இப்பொழுது தேவை என்றதும் அழைக்கிறான். அதுவும் மாலினியின் தாய் வரமுடியாததால் இவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இல்லாவிட்டால் இந்த பயணமோ, மகனுடன் தங்கும் வாய்ப்போ தனக்கு கிடைத்திருக்காது என்று நினைக்கும் போது தான் இவர்களுக்கு தேவைப்பட்டால் உருவிப் போட்டுக் கொள்ளும் கருவேப்பிலை மாதிரித்தானே என்ற எண்ணம் தோன்றாமலில்லை. பிரசவ நேரத்தில் உதவ, குழந்தையைப் பார்த்துக் கொள்ள இலவசமாக ஒரு ஆள் தேவை. ஆள் வைத்தால் அமெரிக்காவில் செலவு எகிறிவிடும். கட்டுப்படியாகாது. இவள் சொல்வதைப் போல் பிரசவத்திற்கு இலவசம்தான் இந்த அம்மா என்னும் ஆட்டோ…

“எது எப்படியோ எனக்கு என் புள்ளைக் கூட இருக்கப் போறது ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு…” தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் பூரணி.
“எவ்வளவு நாள் அங்கேயிருப்பே?” காபி கோப்பையை கீழே வைத்தபடியே கேட்டாள் சிவகாமி.“இனிமே அங்கதான். இந்தியா வரமாட்டேன்.. யார் இருக்கா இங்கே?’இதைக் கேட்டு பெரிதாக சிரித்தாள் சிவகாமி.

“ஏன் சிரிக்கிறே?” எரிச்சலாகக் கேட்டாள் பூரணி.“பின்னே? சிரிக்காம என்ன செய்ய? அவங்க தேவைக்கு உன்னைக் கூப்பிடறாங்க. தேவை தீர்ந்ததும் திருப்பி அனுப்பிடு
வாங்க. உதவிக்கு ஆளை வச்சா நிறைய செலவாகும். கட்டுப்படியாகாது. காரியம் முடிஞ்சதும் திருப்பி அனுப்பிடுவாங்க. மறுபடி இதே தனிமைதான்.”பூரணிக்கு அவளுடைய பதில் அவமானமாக இருந்தாலும் தன்னைத்தானே தேற்றிக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

“ப்ச். அதெல்லாம் இல்லை. என் புள்ளை என்னை அப்படியெல்லாம் தனியே விட்டுட மாட்டான்…” விட்டுக் கொடுக்காமல் பேசினாள். வேறு வழியில்லை. அப்படித்தான்
பேசியாக வேண்டும். சிவகாமி ஒரு வழியாக அவளுடைய உணர்வுகளை சீண்டிவிட்டுவிட்டு எழுந்து போனாள். இதுவரையிருந்த உற்சாகம் குறைந்தது போலிருந்தது
பூரணிக்கு. மகனுக்குப் பிடித்த தேன் குழல் செய்யலாம் என சமையலறைக்கு வந்தபோது வாசலில் குரல் கேட்டது. “பூரணியம்மா… பூரணியம்மா…” பால்காரி தேவகியின் குரல்.

உள்ளிருந்து வந்த பூரணி “வா… வா உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். இந்தா உன் பணம்” என நீட்டினாள்.பணத்தை வாங்கிக் கொண்ட தேவகி “எப்பம்மா அமெரிக்காவுலயிருந்து திரும்பி வருவீங்க?” என்றாள்.“இனிமே இங்க வரமாட்டேன் தேவகி. மகன், மருமக, பேரப்பிள்ளைங்களோட அங்கதான் இருப்பேன். இங்க இருக்கப் பிடிக்கலை தேவகி. தனியா இருக்கற மாதிரியே இருக்கு. எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரியிருக்கு” என்ற பூரணிக்கு சற்று முன் சிவகாமி சொன்னதைப் போல் இவளும் இடக்கு மடக்காக எதாவது சொல்லிவிடுவாளோ என படபடப்பாகயிருந்தது.

“என்னம்மா நீங்க? பிறந்து வளர்ந்த ஊருப் பிடிக்கலைன்னு சொல்றீங்க?” தேவகியின் கேள்வியில் கேலி இருந்தது. “பிறந்து வளர்ந்த ஊராயிருந்தாலும் தனியா வாழற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? ஒரே புள்ளை கடைசி காலத்துல அவனோட வாழணும்னு மனசு ஏங்குது.”“அந்த நாட்ல உங்களுக்கு ஒத்து வருமா?’

இதைக் கேட்டு பூரணி சிரித்தாள். “நான் என்ன அந்த நாட்டுக்கு அதிபராவா ஆகப் போறேன்? எதுவும் தெரியாம ஒத்துவராம முழிக்க? போட்டதை தின்னுட்டு ஒரு
ஓரமா கிடக்கப் போறேன். நாடா முக்கியம்? உறவுகள்தானே முக்கியம்?”

“உங்க மனசுபடியே செய்ங்கம்மா…” கிளம்ப தயாரானாள் தேவகி.“அப்பறம் தேவகி பூக்காரப் பாட்டியைப் பார்த்தா வர சொல்லு. ரெண்டு மூணு நாளா இந்தப்பக்கம் ஆளையே காணும். சாமிக்குப் போட தினமும் அதுக்கிட்ட பூ வாங்கின காசு கொடுக்கணும்” என்றாள். “அட அந்தக் கதையை ஏம்மா கேட்கறீங்க? நாலஞ்சு நாளா அந்த பூக்கார கிழவி உடம்புக்கு முடியாமக் கிடந்துச்சு. காலையில செத்துப் போயிடுச்சு.” கிளம்ப யத்தனித்த தேவகி இப்பொழுது வாசல் படிக்கட்டிலேயே அமர்ந்துவிட்டாள் பூக்காரக் கிழவியின் கதையை சொல்ல.

திக்கென்றானது பூரணிக்கு “அடக் கடவுளே…”“அது போனதைப் பத்தி கூட இல்லைம்மா. வயசானக்கிழவி. இன்னும் எம்மா நாளைக்கு இருக்கும்? பாவம் அவ மருமகதான்…” தேவகிக்கு கண்கள் கலங்கிவிட்டது.“ஏன் அவளுக்கென்னாச்சு?” புருவம் சுருக்கினாள் பூரணி.“அந்தப் புள்ளைக்கு கிழவி செத்த அதிர்ச்சியிலயே வலி எடுத்துட்டு. புள்ளதாச்சி பொண்ணு. அவசர அவசரமா ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்திருக்காங்க. இங்க கிழவி பொணம் கிடக்கு. அங்க அவ பிரசவ வலியில துடிச்சுக்கிட்டிருக்கா.. பாவம் இந்த கிழவியோட புள்ளையை நம்பி வீட்டை விட்டு ஓடிவந்தவ அந்தப் பொண்ணு. சாதிப் பிரச்சனையால அவ குடும்பம் அவளை தலை முழுகிட்டு.

இப்ப பிரசவத்துக்கு ஆத்தா வூட்டுக்கும் போக முடியாம பாவம் அனாதை மாதிரி ஆஸ்பத்திரியில கிடக்கா. புருசனும் தினக் கூலிக்காரன். அன்னாடம் வேலைக்குப் போனாதான் வயித்தைக் கழுவ முடியும். இப்ப புள்ளை ஆத்தா காரியங்களைப் பார்ப்பானா? ஆஸ்பத்திரியில போயி இருப்பானா? அந்த புள்ளைக்கு கடவுள்தான் துணையாயிருக்கனும்”
புலம்பிவிட்டுப் போய்விட்டாள் தேவகி. அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் பூரணி. என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து புடவையை மாற்றிக் கொண்டு கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள். ஆட்டோ பிடித்து டிரைவரை அவசரமாக போகும்படி பணித்து அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். பூக்காரியின் மருமகள்
சேர்க்கப்பட்டிருந்த பிரசவ வார்டை நோக்கி சென்றாள்.

அங்கே…படுக்கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ‘அம்மா… அம்மா…’ என அலறிக் கொண்டிருந்தாள் பொன்னி. நர்ஸ் அவளைப் பார்த்து ‘பொருத்துக்க இன்னும் நல்லா வலி வந்தாதான் உன்னை உள்ளே கொண்டு போகமுடியும்’ என்றாள். பூரணி ஓடிப் போய் அவளுடைய தோளைப் பற்றி தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.அவளைக் கண்டதும் பொன்னி வெடித்து அழுதாள். “பூரணிம்மா… நான் அனாதையாயிட்டேன். என் மாமியா என்னைவிட்டுப் போயிடுச்சு. அது சாவுல கலந்துக்க முடியாம இங்க வந்து கிடக்கிறேன். எனக்கு யாரு இருக்கா? நான் அனாதையா ஆயிட்டேனே?”கதறியவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“அழாத…பொன்னி. நானிருக்கேன். உனக்கு இனி நான்தான் அம்மா. நல்லபடியா குழந்தை பொறக்கும் பயப்படாதே. உன்னையும் உன் புள்ளையையும் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு…”
சொன்ன பூரணியை தெய்வமாக பார்த்தாள் பொன்னி. நர்ஸ் வந்து அவளை வெளியேயிருக்கும்படி பணிக்கவே தைரியம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.
அதே சமயம்…அவளுடைய அலைபேசி அழைத்தது. எடுத்தாள். அமெரிக்காவிலிருந்து மகன் அழைக்கிறான்.

“சொல்லுப்பா…”“அம்மா ரெடியாயிட்டியா? எடுத்து வச்சிக்க வேண்டியதையெல்லாம் ஞாபகமா எடுத்து வச்சுக்கிட்டியா? நாளைக் காலையில பத்து மணிக்கெல்லாம் ஃப்ளைட். மறந்துடாதே…” உறுதிப்படுத்தினான் அவளுடைய ஒரே பிள்ளை.பூரணி நிதானமாக சொன்னாள்.“இல்லப்பா. டிக்கெட்டை கேன்சல் பண்ணிடு. என்னால வர முடியாது. நீ யாரையாவது ஆள் போட்டு மாலினியோட டெலிவரியை பார்த்துக்க…” சொல்லிவிட்டு போனை வைத்தாள்..அம்மா என்னும் அந்த ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம்தான். ஆனால் அது அவனுக்கல்ல என்பது அவனுக்குப் புரியவில்லை.

தொகுப்பு: ஆர்.சுமதி

The post சிறுகதை-பிரசவத்துக்கு இலவசம் appeared first on Dinakaran.

Tags : Sivagami ,Purani ,kungumum ,Poorani ,Dinakaran ,
× RELATED மின்தடையை கண்டித்து சாலை மறியல்