×

தமிழ்நாட்டின் நிதிநுட்ப நகரத்தைக் கட்டுவதற்கான பணி ஆணை, புகாருக்குள்ளான PST கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஏன்?: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: நிதி நுட்ப நகரம் ஒப்பந்தப்புள்ளி ஏலமுறை குறித்து விளக்கம்: தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியினை பன்மடங்கு பெருக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிட தமிழ் நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை, நந்தம்பாக்கத்தில் நிதி தொழில் நுட்ப நகரம் ஒன்று அமைத்திட முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இத்திட்டத்தின் இரண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாட்டினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லும் இத்திட்டம் குறித்து சில சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதில் முதல் திட்டமானது, 56.48 ஏக்கர் நிலப்பரப்பில், நில மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுவதற்கான திட்டம் ஆகும். நில மேம்பாடு, உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், வெள்ளத் தடுப்புச்சுவர், குடிநீர் மற்றும் மறுசுழற்சி நீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் இதில் மேற்கொள்ளப்படும்.

மின்னணு ஒப்பந்தப்புள்ளி தேர்வின் அடிப்படையில், துறை மதிப்பைவிட 16.34% குறைவாக அதாவது, 82.87 கோடி ரூபாய் (ஜி.எஸ்.டி உட்பட) மதிப்பீட்டில் நிதிநுட்ப நகர திட்டத்திற்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பணி ஆணை PST நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டமானது, 5.60 இலட்சம் சதுர அடியில், நிதிநுட்ப கோபுரத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவதற்கான திட்டம் ஆகும். இதற்கான பணி ஆணை 151.55 கோடி ரூபாய் (ஜி.எஸ்.டி உட்பட) மதிப்பீட்டில் மின்னணு ஒப்பந்தபுள்ளி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள URC கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதிநுட்ப நகர திட்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி 01.01.2023 அன்று கோரப்பட்டதில், நான்கு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. ஒப்பந்தப்புள்ளிகளின் ஆய்வின் போது, ஒப்பந்ததாரர் PST இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டிய கே.பி.பார்க் (முதல்நிலை-1) 864 EWS குடியிருப்புகள் திட்டத்தில் கட்டுமானத்தின் தரம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் சில புகார்கள் வந்த விவரமும் அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரரின் பதிவை ஏன் தற்காலிக நிறுத்தம் / ரத்து செய்யக்கூடாது என காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டதும் டிட்கோவின் கவனத்திற்கு வந்தது.

பிறகு இந்த விவகாரம் குறித்து PST இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது என்றும் (வழக்கு எண். O.A.No.775/2021 in C.S.(Comm.)No.108 of 2021); மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தனது 02.12.2021 தேதியிட்ட ஆணையின் மூலம் மேற்கூறிய தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை உத்தரவு (Interim Injunction) பிறப்பித்துள்ளது எனவும் அறிய வந்தது.

நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யும் குறிப்பாணைக்கான இடைக்கால தடை உத்தரவு, ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்த நாள் அன்றும், ஒப்பந்தப்புள்ளி ஆய்வின் போதும் நடைமுறையில் இருந்த காரணத்தால், PST நிறுவனம் கருப்பு பட்டியிலில் சேர்க்கப்படவில்லை. தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படி, ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் நிறுவனம் கருப்புபட்டியலில் இருப்பது கண்டறிப்பட்டால் மட்டுமே, அந்நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படும். PST நிறுவனம் கருப்புப் பட்டியலில் இல்லாத நிலையில், PST நிறுவனமும் மற்றும் மற்ற இரு நிறுவனங்களும் சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மூன்று ஒப்பந்ததாரர்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டதில், துறையின் மதிப்பைவிட 16.34% குறைவாக, அதாவது 82.87 கோடி ரூபாய் (ஜி.எஸ்.டி உட்பட) மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்த PST நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி தேர்வு முறைகள் அனைத்தும், ஆன்லைன் நடைமுறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த தேர்வு முறையின் முடிவுகள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில், tntenders.gov.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி ஏல முறை தேர்வுகள் அனைத்தும் நியாயமான, ஒளிவுமறைவற்ற மற்றும் வெளிப்படையான முறையில் “ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைதன்மை சட்டம் மற்றும் விதிகளின்” அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது. மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஏல தேர்வு முறையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களும் பங்கு பெறலாம்.

மேற்கூறிய இரண்டு பணி ஆணைகளும், துறை மதிப்பீடுகளை விட குறைவான மதிப்பீட்டில் வழங்கியதால், டிட்கோ நிறுவனத்திற்கு 36.15 கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த ஏலமுறைகள், முழுமையான பங்கேற்பு, வெளிப்படையான போட்டித் தன்மையுடன் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாகும்.

2021க்கு பிறகு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உள்ளிட்ட பல்வேறு துறைகளில், PST இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனத்திற்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு 6 வழி தேசிய நெடுஞ்சாலை 7A (புதிய தே.நெ.138) 130.20 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் EPC முறையில் அமைப்பதற்கான பணி ஆணையை 31.03.2023 அன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கே.பி.பார்க் (முதல்நிலை-1) 864 EWS குடியிருப்புகள் கட்டுவதில் கண்டறிப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்த சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், குறைபாடுகள் நிரூபிக்கபட்டால் ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படியும் மற்றும் ஒப்பந்த பணியின் நிபந்தனைகளின் படியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக தண்டனை வழங்கப்படும் வகையிலான நடவடிக்கைகள் (Penal Action) மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டின் நிதிநுட்ப நகரத்தைக் கட்டுவதற்கான பணி ஆணை, புகாருக்குள்ளான PST கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஏன்?: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,PST Construction Company ,Pukkar ,Chennai ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...