×

திருவாருர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருவாருர்: திருவாருர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் காட்டுரில் தலைநகர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பிகர் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வருகை புரிந்துள்ளார். கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முத்துவேலர் நூலகத்தை பார்வையிட்டு வருகிறார். காட்டூர் கிராமத்தில் சுமார் 7,000 சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பில் திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் மிக பிரமாண்டமாக கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இது நூறாவது பிறந்த நாள் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. கடந்த 7ம் தேதி வடசென்னையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம், 15ம் தேதி கிண்டியில் கிங் நோய்தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கலைஞர் சிலை, முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும். திருவாரூரின் சிறப்பை குறிக்கக்கூடிய வகையில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் காரில் திருவாரூர் வந்த முதல்வர் சன்னதி தெரு இல்லத்தில் தங்கினார். நேற்று காலை காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்ற முதல்வர் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை 2 மணிநேரம் நேரில் ஆய்வு செய்தார். கலைஞர் கோட்டத்திற்குள் கலைஞரின் ஒவ்வொரு பழைய புகைப்படங்களையும் பார்த்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு வரும் பீகார் முதல்வர், துணை முதல்வரை வரவேற்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

விழாவுக்காக அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட பந்தலையும், விழா மேடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சன்னதி தெரு இல்லத்துக்கு சென்று இரவு தங்கினார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை படித்தனர். பின்னர் ‘‘மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே’’ என்ற தலைப்பில் நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதா ஜவகர், ராஜா, எழுத்தே என்ற தலைப்பில் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் பேசினர். கவியரங்கம், பட்டிமன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கண்டு ரசித்தனர். இதையடுத்து கலைஞர் கோட்டம் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளனர். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஐஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* கலைஞர் கோட்டத்தின் சிறப்பு

கலைஞர் கோட்டத்தில் உள்ளே நுழைந்தவுடன் ஹாலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வாயிலில் நின்று பார்த்தாலே தெரியும். 7 அடியில் பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்களால் கலைஞர் உட்கார்ந்து பேனா பிடித்து எழுதுவது போல் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைதளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள், கலைஞரின் இளமைக்கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா மற்றும் திராவிட இயக்க தலைவர்களோடு கலைஞர் ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கலைஞர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கலைஞரின் வாழ்க்கை வரலாறு படங்கள், குறும்படங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயிலில் டிக்கெட் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது.

The post திருவாருர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur District ,Kattur ,G.K. Stalin ,Tiruvarur ,Chief Minister of State ,Chattur, Thiruvarur district ,Kadur ,Kattur, ,CM. ,
× RELATED திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்றவர் கைது