×

ஒடிசா ரயில் விபத்தின் சோரோ சிக்னல் பிரிவை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியரின் வீட்டுக்கு சீல்: குடும்பத்துடன் தலைமறைவானதால் திடீர் திருப்பம்

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தின் சோரோ சிக்னல் பிரிவை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் அமீர்கானிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது வாடகை வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பஹானாகாவில் கடந்த 2ம் தேதி நடந்த மூன்று ரயில்கள் மோதல் விபத்தில், இதுவரை 292 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ரயில் விபத்துக்கான காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில்’ குளறுபடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த கோர ரயில் விபத்து வழக்கை, ரயில்வே ஆணையர் தனியாக விசாரணை நடத்தி வரும் நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விபத்து நடந்த பஹானாகா பஜார் ரயில்வே ஸ்டேசனுக்கும், கன்ட்ரோல் ரூமிற்கும் சீல் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘இன்டர்லாக்கிங் சிக்னல்’ பிரிவை கண்காணித்து வந்த சோரோ பிரிவு ஜூனியர் சிக்னல் இன்ஜினியர் அமீர்கானிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டது. அதற்காக சோரோ அடுத்த அன்னபூர்ணா ரைஸ் மில் அருகே இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீர்கானின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் குடும்பத்துடன் மாயமான அமீர்கானின் இருப்பிடம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து அமீர் கானின் வாடகை வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைமறைவான அமீர் கானின் நடவடிக்கைகள் குறித்து இரண்டு சிபிஐ அதிகாரிகள் குழு கண்காணித்து வருவதாகவும், அவரது வாடகை வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஜூனியர் சிக்னல் இன்ஜினியர் அமீர்கானை பிடித்து, ரகசியமான இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒடிசா ரயில் விபத்து வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் ‘லாக் புக்‘, ‘ரிலே பேனல்’, பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு சீல் வைக்கப்பட்டது. ரிலே இன்டர்லாக்கிங் பேனலுக்கும் சீல் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிக்னல் பிரிவில் பணியாற்றியவர்களிடம் விசாரணையை தொடங்கினோம்.

அப்போது சோரோ சிக்னல் பிரிவில் ஜூனியர் இன்ஜினியரான அமீர்கானிடம் விசாரணை நடத்த முயன்றோம். ஆனால் அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து குடும்பத்துடன் மாயமானார். தற்போது அந்த வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறோம். அவரது கட்டுப்பாட்டில் சிக்னல்கள், டிராக் சர்க்யூட்கள், பாயிண்ட் மெஷின்கள், இன்டர்லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்’ என்று கூறின.

The post ஒடிசா ரயில் விபத்தின் சோரோ சிக்னல் பிரிவை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியரின் வீட்டுக்கு சீல்: குடும்பத்துடன் தலைமறைவானதால் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Soro Signal Division ,Odisha train crash ,Balasore ,CBI ,Junior Engineer ,Amirkan ,Soro Signal Division of Odisha ,of Odisha train ,Dinakaran ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி