×

தி.நகரில் உள்ள பள்ளி மாணவர் விடுதியில் பரபரப்பு; சத்துமாவு சாப்பிட்ட 6 பேர் மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அன்ஞ்சுமான் என்ற பெயரில் அரசு உதவி பெரும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் 6 பேர் நேற்று இரவு மாணவர் ஒருவர் ஊரில் இருந்து கொண்டு வந்த சத்துமாவு சாப்பிட்டனர். அதன் பிறகு திடீரென ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் விடுதி நிர்வாகிகள் மயங்கிய மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் மாணவர்கள் சாப்பிட்ட சத்துமாவில் விஷம் கலந்து இருந்ததாக கூறினார். அதை கேட்டு விடுதி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் பள்ளி மாணவர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், விடுதியில் தங்கி இருந்த மாணவர் ஒருவர் தலையில் அதிகளவில் பேன் இருந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் தேங்காய் எண்ணெயில் ‘பேன்’ மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இது விடுதியில் இருந்த மாணவர்களுக்கு தெரியாது. இந்நிலையில் நேற்று சத்துமாவு சாப்பிடும் போது, மாணவர் பையில் வைத்திருந்த பேன் மருந்து கலந்த தேங்காய் எண்ெணயை எடுத்து கலந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் 6 மாணவர்களும் அடுத்தடுத்து மயங்கியது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் மாணவர்கள் மயங்கியது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பள்ளி மாணவர் விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாணவர் விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தி.நகரில் உள்ள பள்ளி மாணவர் விடுதியில் பரபரப்பு; சத்துமாவு சாப்பிட்ட 6 பேர் மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,Rayapetta Government Hospital ,Chennai ,Anjuman ,North Osman Road, D. Nagar, Chennai ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு