×

5 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா

*ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் மீன்பிடித்தனர்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் உள்ள ஏரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர்ஆர்வமுடன் மீன்பிடித்தனர்.பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக ஏரியில் குறிப்பிடும்படியான அளவிற்கு தண்ணீர் வரத்து இல்லாததால் மீன்கள் அதிக அளவில் இல்லை. அதனால் மீன்பிடி திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்ததால் ஏரியில் தண்ணீர் முழுவதுமாக நிறைந்து இருந்தது.

தற்போது கோடைகாலத்தில் தண்ணீர் வற்றி குட்டை போல் காணப்பட்டதால் நேற்று(19ம் தேதி) மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வலை, கத்தா, துணிகள், சல்லடை, கொசுவலை உள்ளிட்டவற்றை கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் விரால், கெண்டை, உளுவை, கெளுத்தி, அயிர போன்ற மீன்கள் அதிகளவில் பிடித்து சென்றனர். 5ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மீன் பிடி திருவிழாவில் அரணாரை,பெரம்பலூர், நொச்சியம், விளாமுத்தூர், சிறுவாச்சூர், புதுநடுவலூர், ஆலம்பாடி, செஞ்சேரி, செல்லியம்பாளையம், நெடுவாசல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்களை பிடித்துச் சென்றனர்.

The post 5 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Perambalur Fishing Festival ,Aranarai Lake ,Perambalur ,Aranarai ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது