×

பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பர்மிங்ஹாம்: ஆஷஸ் முதல் போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸி. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால், 5ஆம் நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. 4வது நாளில் பேட்டிங்கை தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆஸி. அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயன் பந்துவீச்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர் – கவாஜா கூட்டணி களமிறங்கியது. வழக்கம் போல் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்த பிராட் மூலமாக பென் ஸ்டோக்ஸ் அட்டாக்கை தொடங்கினார். டேவிட் வார்னருக்கு பிராட் வீசிய ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் வார்னர் நிதானமாக ரன்களை சேர்த்தார். மறுபக்கம் கவாஜாவும் நங்கூரமிட்டு ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக எதிர்கொண்டார். இதனால் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. இந்நிலையில் ராபின்சன் வீசிய பந்தில் டேவிட் வார்னர் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் லபுஷேன் களம் புகுந்ததால் பந்து மீண்டும் பிராட் கைகளுக்கு சென்றது. முதல் இன்னிங்ஸை போல் பிராட் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். இதன் பலனாக லபுஷேன் 13 ரன்களில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித், பிராட் பந்துவீச்சில் மீண்டும் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை பேர்ஸ்டோவ் டான்ஸ் ஆடி கொண்டாடினார். துவக்கத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில் திடீரென சரிந்த 3 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியது. இந்த நிலையில் 4ஆம் நாள் ஆட்டம் முடிவடைய 16 நிமிடங்களே இருந்தது. இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டை அனுப்பாமல் போலாண்டை அனுப்பியது. இதனால் உற்சாகமடைந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை அமைத்தார்.

ஆனால் அதிலிருந்து தப்பித்த போலாண்ட் சில பவுண்டரிகளை விளாசி ஆச்சரியம் கொடுத்தார். இதனால் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை சேர்த்துள்ளது. கவாஜா 34 ரன்களுடனும், போலாண்ட் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 5ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 174 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றிபெற 7 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. இதனால் இன்றைய 5ஆம் நாள் ஆட்டத்தில் எந்த அணி சிறப்பாக ஆடி வெற்றியை வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக எழுந்துள்ளது. எனவே இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ashes ,first ,England ,Australia ,Birmingham ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை