×

முதுமலை வனப்பகுதி கிராமங்களில் அட்டகாசம் செய்யும் விநாயகன் யானையை கண்காணிக்க 6 கும்கி யானைகளுடன் ரோந்து

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் விநாயகன் யானையை கண்காணிக்க 6 கும்கி யானைகளுடன் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புகுந்த விநாயகன் என பெயரிடப்பட்ட காட்டு யானை ஒன்று கடந்த ஒராண்டுக்கு முன் வீடுகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வந்தன. மேலும் பொதுமக்களையும், தொழிலாளர்களையும் அச்சுறுத்தியதால் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.இதனைத்தொடர்ந்து காட்டு யானை விநாயகன் கடந்த வருடம் அங்கிருந்து பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த ஒரு வருட காலமாக முதுமலை வனப்பகுதியை ஒட்டிய ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட குனில் வயல், ஏச்சம் வயல், வடவயல், ஓடக் கொல்லி, போஸ்பார உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  தொடர்ச்சியாக புகுந்து வீடுகள், விளை நிலங்கள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கிராமங்களை ஒட்டிய வன எல்லைப்பகுதிகளில் அகழி அமைத்திருந்தபோதும் அதனையும் தாண்டி விநாயகன் யானை ஊருக்குள் வருவது தொடர்கிறது. இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கோவையில் இருந்து வந்த வனக்குழுவினர் அட்டகாசம் செய்வது யானை விநாயகன்தானா? என்பதை உறுதிப்படுத்த கண்காணித்தனர். அப்போது விநாயகன் யானைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து யானை கிராமங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒலா எல்லைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் வனத்துறையினர் தற்போது எல்லைப்பகுதிகளில் கும்கி யானைகள் மூலமும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரோந்துப் பணிகளுக்காக முதுமலை யானைகள் முகாமில் இருந்து ஏற்கனவே சங்கர், கிருஷ்னா ஆகிய 2 யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் மூர்த்தி, வசீம், ஜம்பு, கணேஷ் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. கூடலூர் வனச்சரகர் கணேசன், முதுமலை வனச்சரகர் மனோகரன் தலைமையில் 30க்கும்  மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், வனப் பணியாளர்கள் மற்றும் யானை பாகன்கள்  இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன எல்லையில் கும்கி யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் விநாயகன் யானை அப்பகுதிக்கு வராது என்றும், அவ்வாறு வந்தாலும் கும்கி யானைகள் மூலம் விரட்டிவிட முடியும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். …

The post முதுமலை வனப்பகுதி கிராமங்களில் அட்டகாசம் செய்யும் விநாயகன் யானையை கண்காணிக்க 6 கும்கி யானைகளுடன் ரோந்து appeared first on Dinakaran.

Tags : Atakasam ,Mumbumalai ,Cuddalore ,Mutumalai forests ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே