×

குறநாட்டு குட்டையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் திருக்குள தெருவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குட்டை உள்ளது. இக்குட்டையில், கோரை புற்கள், செடி கொடிகள் முளைத்து பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. இதில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகளவில் உற்பத்தியாகி உலா வருகிறது. குட்டைக்கு, அருகில் உள்ள வீடு மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறிய கழிவு நீர் குட்டையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மக்கள் மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர்.

அருகில், உள்ளவர்கள் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைத்தால்கூட அதில் கிடைக்கும் தண்ணீரும் சாக்கடை நாற்றம் வீசுவதால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த குட்டைக்கு மழைநீர் செல்வதற்காக கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. மழைநீர், செல்ல கட்டப்பட்ட கால்வாய்களை ஒரு சிலர் ஆக்கிரமித்து, கழிவு நீர்விட பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், குட்டையில் கழிவு நீர் விடுபவர்கள், குப்பை கொட்டுபவர்கள் மீது நவடிக்கை எடுக்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் கூறுகையில், ‘மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருக்குளத்தெருவில் உள்ள குறநாட்டு குட்டையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குளக்கரையை சுற்றிலும் கட்டிடக்கழிவுகள் கொட்டி, கழிவு நீர் விடப்பட்டுகிறது. இதனால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், குட்டை நீரும் மாசுபடுகிறது. எனவே, குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்டியவர்கள் 7 நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post குறநாட்டு குட்டையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kurnatu Kutdai ,Mamallapuram ,Kuranattu ,Thirukkula Street ,Kurnattu ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...