×

பெரும்புதூர் முதல் வாலாஜா வரை ஆமை வேகத்தில் 6 வழிச்சாலை பணி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பெரும்புதூர்-வாலாஜா 6 வழிச்சாலை பணிகள், கடந்த 2018ல் தொடங்கி 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. இச்சாலை பணி ஆமை வேகத்தில் நடப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு, ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முதன்மைச் சாலைகளில் ஒன்றான சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், குண்டும் குழிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018ம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021ம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரை மொத்தம் 34 மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், இதுவரை 11 பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கப் பணிகளும் ஆங்காங்கே துண்டு துண்டாக முடிக்கப்பட்ட நிலையில், முடங்கிக் கிடக்கின்றன.

சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய பிறகு 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றரை ஆண்டுகளில், அதாவது 1277 நாட்களில் இந்த பகுதியில் மொத்தம் 786 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்துகளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சாலையில் பயணம் செய்வதே சாகசம் தான். இவ்வளவு கண்டனங்களை எதிர் கொண்டும் கூட சாலை விரிவாக்கப்பணிகள் விரைவுபடுத்தப்படாதது மன்னிக்க முடியாத அலட்சியம். எனவே, தடைபட்டுக் கிடக்கும் பணிகளை மீண்டும் தொடங்கவும், குறித்த காலத்திற்குள் முடித்து 6 வழிச்சாலையை முடிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெரும்புதூர் முதல் வாலாஜா வரை ஆமை வேகத்தில் 6 வழிச்சாலை பணி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Perumputur ,Wallaja ,Ramadoss ,National Highways Authority ,CHENNAI ,Walaja ,Perumbudur ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...