×

வேலூர் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் இணை அமைச்சர் பேட்டி

வேலூர், ஜூன் 20: வேலூர் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். வேலூரில் நடந்த பாஜ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டின் வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, அரசியல் வளர்ச்சி ஆகியவற்றில் கடந்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டின் தயாரிப்புகளைக் கொண்டே நம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது போன்றவளர்ச்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை. உலக அளவில் இந்தியா மட்டும் தான் 6 சதவீதம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்து இருந்தது. இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோன்று ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பைப்புகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள் கொண்டு வரப்பட்டு ஒரு நாளைக்கு புதியதாக 38 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை வசதியில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்திற்கு வரும். 2014 ஆம் ஆண்டில் 74 விமான நிலையங்களே இருந்தது. இப்பொழுது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து உலகெங்கும் சென்று சாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வேலூரில் உள்ள சிறிய விமான நிலையம் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை- பெங்களூரு இடையே புதிய சாலைப்பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தால், 2 மணிநேரத்தில் சென்னை- பெங்களூரு சென்றுவரலாம். வேலூர் மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள் கொண்டுவரவும் கேட்கப்பட்டுள்ளது. அரசிடம் நானும் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தேசிய துணைத்தலைவர் அருணா, மாநில பொதுசெயலாளர்கள் கார்த்தியாயினி, ராஜ்குமார், மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுசெயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு, துணை தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post வேலூர் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் இணை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vellore airport ,Minister of State ,Vellore ,Union minister of state ,VK Singh ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம்,...