×

கைதிகளை சீர்திருத்துவதுதான் காவலரின் முக்கிய பணி வேலூர் சரக டிஐஜி பேச்சு ஆப்காவில் 5 மாநில சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி

வேலூர், ஜூன் 20: ‘கைதிகளை சீர்திருத்துவதுதான் காவலரின் முக்கிய பணி’ என வேலூர் ஆப்காவில் 5 மாநில சிறை அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேசினார்.வேலூர் ஆப்காவில்(சிறை நிர்வாகம் மற்றும் சிறை சீர்திருத்தம்) சிறைத்துறை அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 31 சிறைத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் பாஸ்கர், வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மதன்ராஜ் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பங்கேற்று பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி புத்தக மலரை வெளியிட்டு பேசியதாவது: சிறைக்குள் தண்டனை முடிந்து, விடுதலைக்கு பிறகு கைதிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சிறைக்குள் தொழில்கள் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு மூலம் விடுதலையாகும் கைதிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 43.6 சதவீதமும், 30 வயது முதல் 50 வயதுக்குள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 43.3 சதவீதம் என மொத்தம் 86.9 சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு சிறைக்குள் சரியான நேரத்தில் வாழ்க்கை மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்.

30 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோர்கள் வேலை செய்ய தகுதி உடையவர்கள். தொழில்கள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். சிறைக்குள் கைதிகள் தொழில்களில் ஈடுபடுவதால், சமூகமும், அவர்களும் பயன்பெறுகின்றனர். உடல் சார்ந்த கொலை, திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர்களில் 87.6 சதவீதம் பேரை எளிதாக திருத்த முடியும். கூட்டு கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்களை திருத்துவது கடினமாகும். மேலும் கல்வி, நூலகம், மருத்துவம், சுகாதாரம், உணவு, உடை, விளையாட்டு, இலவச சட்ட உதவிகள் உள்ளிட்டவை கைதிகளின் மனநிலையை மாற்ற உதவியாக இருக்கும். கைதிகளை சீர்திருத்துவதுதான் காவலரின் முக்கிய பணி. சிறப்பாக பயிற்சியை கற்றுக்கொண்டு கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கைதிகளை சீர்திருத்துவதுதான் காவலரின் முக்கிய பணி வேலூர் சரக டிஐஜி பேச்சு ஆப்காவில் 5 மாநில சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Vellore Saraga ,DIG ,Afga. ,Vellore ,Vellore Afga ,Afghanistan ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே பயங்கரம் இருளர்...