×

விடிய விடிய பெய்த கன மழையால் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், தண்ணீர் தேங்கிய சாலைகளில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்து, மழைநீரை உடனுக்குடன் அகற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் தாம்பரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் மேற்கண்ட பகுதிகளுக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் மற்றும் தாம்பரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அறிந்த தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர், சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் எளிதாக சாலைகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகளிடம் மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்து பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருந்தனர். இருப்பினும் மழையினால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலை ஆகியவற்றில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, காலை நேரத்தில் வேலை மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் மழையில் நனைந்தபடி பேருந்துக்காக காத்துக் நின்றனர். முடிச்சூர், ரங்கா நகர் பிரதான சாலை அருகே தனியாருக்கு சொந்தமான வயல்வெளியில் 80 ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்று உள்ளது. உரிய பராமரிப்பு இன்றி இருந்த அந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர் விடிய விடிய பெய்த கனமழையினால் இடிந்து கிணற்றில் விழுந்தது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் கிணற்றில் தவறி விழும் நிலை காணப்பட்டது முடிச்சூர் ஊராட்சி அலுவலர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் உடனடியாக விரைந்து கிணற்று பகுதியில் சவுக்கு கொம்புகளை நட்டு தடுப்பு ஏற்படுத்தி, ஸ்கிரீன் போட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பாதுகாப்பற்ற சூழலில் கிணறு இருப்பதால் கிணற்றின் உரிமையாளரை வரவழைத்து கிணற்றை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், கிணற்றை மூடவும் கிணற்றின் உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

The post விடிய விடிய பெய்த கன மழையால் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Commissioner ,Akummeena ,Dinakaran ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...