×

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

 

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ரூ.8 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். சிஎம்டிஏ நிதியிலிருந்து ஈவிபி பார்க் அவென்யூ, சுப்பையா நகர், அசோக் பிருந்தாவனம், பாலாஜி நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், பத்மாவதி நகர் ஆகிய பகுதிகளில் 7 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்கள் அருகிலேயே உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுப்ரமணி நகரில் அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதிய நியாய விலை கடை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. நிறைவடைந்த இந்த வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் தயார் அகரம் சாலை, துர்க்கை அம்மன் கோயில் சாலை ஆகிய பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டு வைத்தார். மொத்தம் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான இந்த திட்டப் பணிகளை நேற்று மாலை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சரஸ்வதி, துணை சேர்மன் உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி, உஷா நந்தினி, பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜனார்த்தனன், மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஊராட்சி செயலர் கோதண்டராமன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், நகர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ayyappanthangal panchayat ,Minister ,Thamo Anparasan ,Poontamalli ,Ayyappanthangal ,D.Mo.Anparasan ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...