×

மரக்காணம் அருகே மர்மநபர்கள் அட்டகாசம் கணவருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளி 7 பவுன் தாலி செயின் பறிப்பு

மரக்காணம், ஜூன் 20: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் தியாகு (35). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நிஷா (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று அங்கு தங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு இசிஆர் சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பினர். மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தின் அருகில் வந்த போது இவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நிஷாவின் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலி செயினை பறித்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷா தனது தாலி செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஆனால் மர்ம நபர்கள் நிஷாவை கீழே தள்ளி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் இரக்கம் காட்டாத மர்ம நபர்கள் நிஷாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர். அப்போது பைக்கில் இருந்து விழுந்து தியாகுவும் காயமடைந்தார். இருந்தும், படுகாயம் அடைந்த தனது மனைவியை மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசாருக்கு தியாகு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மரக்காணம் அருகே கோட்டிக்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தொடர்ந்து இப்பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

The post மரக்காணம் அருகே மர்மநபர்கள் அட்டகாசம் கணவருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளி 7 பவுன் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Marakkanam ,Thiaku ,Ekkiarkuppam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்