×

நில மோசடி வழக்கில் பாஜ மாநில நிர்வாகி மின்ட் ரமேசுக்கு 2 நாள் போலீஸ் காவல்: புகார்கள் குவிகின்றன

சென்னை: பாஜ மாநில நிர்வாகி மின்ட் ரமேசை 2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அவர் மீது மேலும் பல புகார்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜவில் நெசவாளர் அணி மாநில செயலாளராக இருந்தவர் மின்ட் ரமேஷ். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் இருந்தன. அதில் ரவுடி நாகேந்திரனுடன் சேர்ந்து செய்த ஒரு கொலை வழக்கில் மின்ட் ரமேசுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை முடிந்ததும், சிறையில் இருந்து வெளியில் வந்தவர் பாஜவில் சேர்ந்து, மாநில நிர்வாகியாகிவிட்டார். இவர், வட சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் தொடர்ந்து நில தரர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்குவதாக புகார்கள் வந்தன. வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணி. இவருக்கு கொரட்டூரில் 78 சென்ட் நிலம் உள்ளது. அதை விற்பனை செய்ய ரமேசை அணுகினார். ஆனால் அவர் விற்பனை செய்யவில்லை. இதனால், அவரே நிலத்தை விற்பனை செய்து விட்டார். இது தெரிந்ததும் அவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.48 லட்சத்தை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் வந்ததும், உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவருடன் நாகர்கோவிலை சேர்ந்த மகேஷ் (47) என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மின்ட் ரமேசை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மின்ட் ரமேஷ் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களை மிரட்டி தனது பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொண்டதாக இதுவரை 5 புகார்கள் வந்துள்ளன. அதில் அம்பத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி, ரமேஷ் தன்னுடைய மனைவி லலிதா பெயரில் இடத்தை பதிவு செய்து கொண்டார். பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த புகாரில் மின்ட் ரமேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மின்ட் ரமேசை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மின்ட் ரமேஷ் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களை மிரட்டி தனது பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொண்டதாக மின்ட் ரமேஷ் மீது இதுவரை 5 புகார்கள் வந்துள்ளன.

The post நில மோசடி வழக்கில் பாஜ மாநில நிர்வாகி மின்ட் ரமேசுக்கு 2 நாள் போலீஸ் காவல்: புகார்கள் குவிகின்றன appeared first on Dinakaran.

Tags : BJP ,Mint Ramesh ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...