×

டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவு: குற்றவாளி பீகாரில் அதிரடி கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் டாஸ்மாக் கடை ஊழியர் கொலை வழக்கில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் பீகாரில் கைது செய்தனர். ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (42). வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் ராமு (45). இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரவு டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, டாஸ்மாக் கடையை பூட்டிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது, கடைக்கு அருகாமையில் பதுங்கியிருந்த 2 மர்ம நபர்கள், துளசிதாஸை கூர்மையான இரும்பு ஆயுதத்தின் மூலம் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவத்தை தடுக்க சென்ற ராமுவையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், பலத்த படுகாயமடைந்த துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ராமுவின் முதுகில் பாய்ந்த துப்பாக்கி குண்டை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர், டாஸ்மாக் ஊழியர் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 பேரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இதில், தலைமறைவாக இருந்த பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ்குமார் (25). 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அரவிந்த் குமார் ராம் (26) என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவு குற்றவாளி பீகாரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார், பீகாருக்கு சென்று அரவிந்த் குமார் ராமை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், ‘சிறையில் இருக்கும் உமேஷ்குமார் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கொலை சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன்பு உமேஷ்குமார் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார். அப்போது, துளசிதாஸ் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. மேலும், பிகார் மாநிலத்தில் இருந்து வந்து தன்னிடமே தகராறு செய்கிறாயா என துளசிதாஸ், உமேஷ் குமாரை சரமாரியாக தாக்கி குடும்பத்தினரை இழிவுபடுத்தி பேசி அனுப்பியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்து பீகாருக்கு, புறப்பட்டு சென்ற உமேஷ் குமார், அரவிந்த்குமார் ராமிடம் நடந்தவற்றை கூறினாார். இதனால், 2 பேரும் சேர்ந்து, ஒரகடம் டாஸ்மாக் ஊழியரான துளசிதாஸை கொலை செய்ய திட்டம் தீட்டி பீகாரிலிருந்து துப்பாக்கி வாங்கி வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட அரவிந்த் குமார் ராம் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவு: குற்றவாளி பீகாரில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Bihar ,Sriperumbudur ,Oragadam Tasmac ,
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...