×

ஹசரங்கா சுழலில் மூழ்கியது யுஏஇ 175 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

புலவாயோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்றில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய இலங்கை அணி 175 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பி பிரிவு), டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசியது. பதும் நிசங்கா – திமத் கருணரத்னே இணைந்து முதல் விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்து இலங்கைஅணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். கருணரத்னே 52 ரன், நிசங்கா 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து குசால் மெண்டிஸ் – சமரவிக்ரமா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்து அசத்தியது. குசால் 78 ரன் (63 பந்து, 10 பவுண்டரி), சமரவிக்ரமா 73 ரன் (64 பந்து, 9 பவுண்டரி) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் தசுன் ஷனகா 1, தனஞ்ஜெயா டி சில்வா 5 ரன்னில் வெளியேற, கடைசி கட்டத்தில் சரித் அசலங்கா – வனிந்து ஹசரங்கா ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்தது.

அசலங்கா 48 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஹசரங்கா 23 ரன்னுடன் (12 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். யுஏஇ தரப்பில் அலி நாசர் 2, முஸ்தபா, அப்சல் கான், ஹமீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 356 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு அணி களமிறங்கியது. ஹசரங்கா சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய யுஏஇ பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, ஐக்கிய அரபு அணி 39 ஓவரில் 180 ரன் மட்டுமே எடுத்து 175 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. கேப்டன் வாசீம், அரவிந்த் தலா 39 ரன், அலி நாசர் 34, ரமீஸ் ஷாஷத் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா 8 ஓவரில் 1 மெய்டன் உள்பட 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். லாகிரு, தீக்‌ஷனா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஹசரங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post ஹசரங்கா சுழலில் மூழ்கியது யுஏஇ 175 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,UAE ,Hazaranga ,Bulawayo ,ICC World Cup ODI ,United Arab Emirates ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...