×

விழா முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு திருவாரூரில் கலைஞர் கோட்டம் இன்று திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்; துணை முதல்வர் தேஜஸ்வி, அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்பு

சென்னை: திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி விழா முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் அருகே காட்டூரில் தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில்ரூ.12 கோடி செலவில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை,அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் துவங்கும் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடக்கிறது. 11 மணிக்கு ‘‘மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே’’ என்ற தலைப்பில் நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதா ஜவகர், ராஜா, எழுத்தே என்ற தலைப்பில் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர். பிற்பகல் 3.30 மணிக்கு மாலதி லஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடக்கிறது.

மாலையில் நடைபெறும் விழாவில் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து தலைமை உரையாற்றுகிறார். இதையடுத்து கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சென்னை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தயாளுஅம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார்.

இவ்விழாவில் கலந்து கொள்ள நேற்றுமுன்தினம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் நள்ளிரவு 12 மணியளவில் திருவாரூர் சன்னதி தெரு இல்லத்திற்கு வந்து அங்கு தங்கினார். நேற்று காலை 9.45 மணிக்கு காரில் புறப்பட்டு காட்டூர் கலைஞர் கோட்டத்துக்கு காலை 10 மணியளவில் சென்றார். பிற்பகல் 2 மணி வரை விழா முன்னேற்பாடு பணிகள், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச்சிலை, முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்குகள் மற்றும் பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளதை முதல்வர் பார்வையிட்டார்.

* ஆகாய தாமரைகளை அகற்றும் பணி ஆய்வு
கலைஞர் கோட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர், மீண்டும் சன்னதி தெரு இல்லத்திற்கு திரும்பும் வழியில் திருவாரூர் ஓடம்போக்கியாற்றில்ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* காலையிலும், மாலையிலும் மக்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்
திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து நேற்று காலை புறப்படுவதற்கு முன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர், கலைஞர் கோட்டத்தை ஆய்வு செய்து வீட்டுக்கு திரும்பினார். நேற்று மாலை 6.30 மணியளவில் சன்னதி தெரு இல்லத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் அளித்தனர். பின்னர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள காட்டூருக்கு காரில் சென்று கலைஞரின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முக்கால் கி.மீ தொலைவுக்கு முன் காரில் இருந்து இறங்கி நடந்தே கலைஞர் கோட்டத்திற்கு வந்தார். அங்கு விழா அரங்கை இரண்டாவது முறையாக பார்வையிட்டு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காரில் சன்னதி தெரு இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

The post விழா முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு திருவாரூரில் கலைஞர் கோட்டம் இன்று திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்; துணை முதல்வர் தேஜஸ்வி, அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Artist Kotham ,Tiruvarur ,Bihar ,Nitish Kumar ,Deputy Chief Minister ,Tejaswi ,CHENNAI ,Artist Kottam ,Tejashwi ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...