சென்னை: தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்தார். எரிசக்தித்துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நில நிர்வாகத்துறை ஆணையராக பணியாற்றி வந்த பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி/ திட்ட இயக்குனர்) பணியாற்றி வந்த ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக (புலனாய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக பணியாற்றி வந்த விஜயா ராணி, கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிசக்தி துறை நிறுவன நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ஆசியா மரியம், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர் சஹாமுரி, சேலம் மாவட்ட பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக (சிட்கோ) தலைவராக பணியாற்றி வந்த எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எஸ்.விஜயகுமாருக்கு அடையாறு-கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராக பணியாற்றி வந்த எஸ்.ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த கண்ணன், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பால்வளம், மீன்வளம், கால்நடைத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங், நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பணியாற்றி வந்த அலர்மேல் மங்கை, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மை நலத்துறை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுரேஷ் குமார், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.