×

தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பாஜ நிர்வாகி ‘மிளகாய்பொடி வெங்கடேசன்’ மேலும் 2 வழக்குகளில் அதிரடி கைது: காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

சென்னை: தொழில் அதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாஜ நிர்வாகியான மிளகாய் பொடி வெங்கடேசனை போலீசார் மேலும் 2 வழக்கில் கைது செய்தனர். பாஜ பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டு 2 மணி நேரத்தில் மாற்றப்பட்டவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய் பொடி வெங்கடேசன். நிழல் உலக தாதாவான வெங்கடேசன், சென்னை பாடியநல்லூரில் வசித்து வருகிறார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாகவும், அதிகாரிகளை தாக்கியதாகவும் தனித்தனியாக 53 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஆந்திராவில் மட்டும் 40 வழக்குகள் உள்ளது. இவர், ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில் ஆந்திரா போலீசார் செம்மர கடத்தல் வழக்கில் மிளகாய்பொடி வெங்கடேசனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் தனது பாதுகாப்பை கருதி மிளகாய்பொடி வெங்கடேசன் முக்கிய பாஜ நிர்வாகி ஒருவர் மூலம் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே மிளகாய்பொடி வெங்கடேசன் கட்சி நிதிக்காகரூ.50 லட்சம் பணம் நிதியாக வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பலனாக பாஜ தலைமை, மிளகாய்பொடி வெங்கடேசனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மாநில செயலாளர் பதவி வழங்கி கவுரவித்தது. பதவி கிடைத்தவுடன் அவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், 2 மணி நேரத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்டாலும், கட்சியில் அவர் நினைத்தது எல்லாமே நடந்தது. வெளிமாநில கவனர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பலரும் அவரது வீட்டுக்கு வந்து சென்றனர்.

இந்த செல்வாக்கால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது, என்று நினைத்துக் கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான், தொழிலதிபர் கண்ணன் மற்றும் அவரது நண்பரான திருவள்ளூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக உள்ள சீனிவாசன் ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து தொழில் ெசய்து வருவதால், தொழிலதிபர் கண்ணனிடம் இருந்து அவரது தொழில் பாட்னர் சீனிவாசன்ரூ.18 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால், நண்பர்கள் மூலம் அப்போது பாஜ பிற்படுத்தப்பட்டோர் மாநில செயலாளராக இருந்து மிளகாய்பொடி வெங்கடேசன் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

சில நாட்களுக்கு முன்பு, மிளகாய்பொடி வெங்கடேசன், சீனிவாசனிடம் கட்டப்பஞ்சாயத்து செய்துரூ.5 கோடி பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படிரூ.5 கோடி பணத்தை திரும்ப கொடுப்பதாக சீனிவாசனும் உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி பணம் வராததால், கண்ணன், மிளகாய்பொடி வெங்கடேசன் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது மிளகாய்பொடி வெங்கடேசன், கண்ணனிடம் பணத்தை தர முடியாது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார். பஞ்சாயத்து செய்ய சொன்னவரையே மிரட்டிய மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் சீனிவாசன் மீது கண்ணன் புகார் அளித்தார்.

இந்நிலையில், சென்னை மண்ணடி மூர் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுல்தான் (52) என்பவர் ஆவடி மாநகர ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம்ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பாஜ பிரமுகராக உள்ள மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பாஜ செயலாளர் நரேஷ் (38) மற்றும் நரேஷின் தந்தை பிரதீப்குமார் (63) ஆகியோர் அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்தார். தொடர்ந்து புகார்கள் வந்ததால், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண், தனிப்படை அமைத்து மிளகாய் பொடி வெங்கடேசனை கைது செய்தார். பின்னர் கண்ணன் கொடுத்த புகார் மீது வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் சுல்தான் கொடுத்த புகார் மீதும் மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தபோது போலீஸ் எஸ்.ஐ. ஒருவரை, விரைவில் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று மிரட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து 3 வழக்குகளில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் புகார்களில் சிக்கி வரும் வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆவடி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பாஜ நிர்வாகி ‘மிளகாய்பொடி வெங்கடேசன்’ மேலும் 2 வழக்குகளில் அதிரடி கைது: காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Milakaipodi Venkatesan ,Chennai ,Milkai Podi Venkatesan ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...