×

பஸ்கள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி: 80 பயணிகள் படுகாயம்: 4 பேர் கவலைக்கிடம்

நெல்லிக்குப்பம்: கடலூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 80 பயணிகள் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் நாராயணபுரம் அருகே பண்ருட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று கடலூருக்கு தனியார் பஸ் அதிவேகமாக சென்றது. நாராயணபுரம் அருகே பஸ்சின் டயர் திடீரென வெடித்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது கடலூரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வழியாக திருவண்ணாமலை சென்ற தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு பஸ்களும் உருக்குலைந்து சேதமானது. 2 பஸ்களிலும் வந்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து அலறினர். அவ்வழியாக சென்றவர்கள், இளைஞர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் வந்து பஸ்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நெல்லிக்குப்பம் தனியார் பஸ் டிரைவர் அங்காலமணி (33), திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் முருகன் (45), சேமகோட்டை சீனிவாசன் (50), கவரப்பட்டு தனபால் (60), பண்ருட்டி அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்த நடராஜன் (83) ஆகிய 5 பேர் இறந்தனர். மேலும் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் ஐயப்பன், வேல்முருகன், கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி ராஜாராம் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மருத்துவமனையில் குவிந்த ரத்தக் கொடையாளர்கள்: விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 80 பேர் காயமடைந்துள்ளதால் சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுவதாக மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு, சமூக அமைப்புகளின் சேவையால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்வதற்கு குவிந்தனர். மாலை வரை ரத்தம் பெறப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு தேவையான ரத்தம் கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

* உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலாரூ.2லட்சம் : முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில், 2 பஸ்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

The post பஸ்கள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி: 80 பயணிகள் படுகாயம்: 4 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது