×

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு: ஒரே டேக்கில் உயிரை விட்ட ஆடு

ஆட்டுச் சண்டை, கிடா முட்டு, தகர்ச்சண்டை அல்லது கிடாகட்டு என்பது செம்மறியாடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு விளையாட்டாகும். இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முன்பு தமிழ்நாட்டில், நெல்லை, மேலப்பாளையத்தில் கிடாகட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்ததால் கிடா கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சம்பன்குளத்தில் குர்பானி கொடுப்பதற்காக மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து விலை உயர்ந்த ஆடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டாக சண்டையில் ஈடுபட வைத்துள்ளனர். சுமார் மூன்று வயது உடைய 2 ஆடுகளை மோதவிடும் வகையில் இந்த ஆட்டு சண்டை நடந்தது. அப்போது 2 ஆடுகளும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஒரே முட்டில் மற்றொரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. இரண்டு ஆடுகள் மோதும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆட்டு சண்டை சட்டத்தை மீறி நடந்ததா என்பது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு: ஒரே டேக்கில் உயிரை விட்ட ஆடு appeared first on Dinakaran.

Tags : Ongi Adicha ,Kita Muttu ,Tagarchandai ,Kidagattu ,
× RELATED மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில்...