×

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேட்டி சென்னையில் கனமழை பெய்தும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை

சென்னை: சென்னையில் கனமழை பெய்த போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை எழிலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சென்னை மாநகராட்சிக்கு வரும் மழை தொடர்பான புகார்களை கண்காணித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், 24 மணி நேரமும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை பெற்று அதன் மூலமாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னையில் பெய்த கனமழையால் மனித உயிர்ச்சேதமோ, விலங்குகள் உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

மேலும், நகராட்சியில் இருந்து 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே, கடந்த வாரம் முதல்வரின் உத்தரவின்படி, தலைமைச்செயலர் தலைமையில் தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல, கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழை தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் மழைநீர் அகற்றும் பணி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளன. இதில், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் போக்குவரத்து பிரச்னை ஏற்படாத வண்ணம் அனைத்து பணிகளும் நடக்கின்றன. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடந்த மழையால் எந்த பகுதிகள் எல்லாம் பாதிக்கப்பட்டனவோ, அதனை கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேட்டி சென்னையில் கனமழை பெய்தும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Chennai ,Revenue Minister KKSSR ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு