×

காலும் வலிக்குது லீவும் கெடைக்கல என சேலம்காரர் புலம்புவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனிக்காரருக்கு என்ன வருத்தமாம்..’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களின் இதய சிம்மாசனத்துல மாங்கனிக்காரர் குடியிருக்காராம். விரைவில் 2 கோடி பேரின் இதயத்துல குடியேறனுமுன்னு உத்தரவு போட்டிருக்காராம். அதற்கான வேலையில் அடிப்பொடிகள் தீவிரமாக இருக்காங்களாம். இதற்கிடையில் மாங்கனிக்காரரின் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருக்காம். பொதுச்செயலாளர் ஆனபோது, வாழ்த்துக்களை பெறுவதற்கு பல மணி நேரம் நின்னுக்கிட்டே இருந்தாராம். அதோட இல்லாமல் மகிழ்ச்சியில கொஞ்சம் குண்டாயிருக்காராம். இதனால கால்வலி அதிகமாகி போச்சாம். பத்து நாட்கள் காலை உயரமான இடத்துல தூக்கி வைத்து ஓய்வு எடுக்கணுமுன்னு டாக்டர்கள் சொன்னாங்களாம். ஆனா, அதனை கடைபிடிக்க முடியாம இருக்காராம் சேலத்துக்காரர். மம்மி விட்டுச்சென்ற தொண்டர்களை காப்பாத்த வேண்டும் என்பதை நினைச்சாலே உட்கார முடியலன்னு, அவரது நெருக்கமான நண்பர்களிடம் கூறி கண் கலங்குறாராம். இதனால உடல்நலனையும் பொருட்படுத்தாம, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கறேன்னு சொல்றாராம். இதை நினைச்சு நெஞ்சுருகி போறாங்களாம் அவரோட அடிப்பொடிகள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை மாநில நிர்வாகிக்கே தண்ணி காட்டினாங்களாமே உள்ளூர் கட்சி நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகருக்கு தாமரைக்கட்சியின் மாநிலத்தலைவர் கடந்த வாரம் வந்திருந்தார். கட்சி நிகழ்ச்சிகளுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் நேரம் கொடுத்திருந்தவர், மதுரையில் ‘குளம்’ என முடியும் ஊரில் கட்சியின் ஐடி விங்க் ஊடகப்பிரிவின் மாநில நிர்வாகியின், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐடி கம்பெனி திறப்பு விழாவில் பங்கேற்கவும் உறுதி தந்திருந்தார். ஐடி மாநில நிர்வாகியானவர் கட்சி சாயலின்றி மாநிலத்தலைவர் படத்தை மட்டுமே போட்டு ஊர் முழுக்க வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டியதுடன், உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடம் பெரிதாக சொல்லிக்கொள்ளவில்லை. ஏற்கனவே நகருக்குள் தாமரைக்கட்சிக்குள் கோஷ்டி பூசல் பெருகிக் கிடக்கும் நிலையில், எங்களிடம் சொல்லாமல் நேரடியாகப் போய் நிகழ்ச்சிக்கு தலைவரை அழைத்து வருவதா என்று ஆத்திரத்தின் எல்லைக்குப் போன, மாவட்ட முக்கியப் புள்ளிகள், தூங்கா நகருக்கு வந்த மாநில தலைவரை வெவ்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று நேரத்தைக் கடத்தி, கடைசிவரையிலும் மாநிலத்தலைவர் அந்த ‘குளம்’ ஊருக்கு போகாமல் செய்து, தூங்கா நகரத்தை விட்டே அனுப்பி வைத்து விட்டனர். ஐடி கம்பெனி திறக்க பெரும் செலவிட்டு, அத்தனை பேரையும் அழைத்து வைத்து, கட்டிய ரிப்பனை வெட்டுவதற்காக காத்திருந்த ஐடி நிர்வாகி ரொம்பவும் கலங்கிப்போனார். காத்திருந்து கடைசி நேரத்தில் மாநிலத்தலைவரிடம் விபரம் கேட்க, ‘அச்சச்சோ’ என்றபடி, ‘வர்ற 2ம் தேதி வரும்போது வந்துடுறேன்’ என்றாராம். மாநில நிர்வாகியான ஏங்கிட்டயே உள்ளூர் நிர்வாகிங்க இத்தனை அரசியல் பண்றாங்களே.. என்று மாவட்டத்தினர் குறித்து மாநில நிர்வாகியானவர், பார்ப்போரிடம் எல்லாம் புலம்பித்தவித்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வளர்ச்சி ஆபிசர்ஸ் எப்ப வர்றாங்க.. எப்ப போறாங்கன்னே தெரியலைன்னு புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல பெரும்பாலான ஆபிஸ்ல ஆபிசர்ஸ் நேரத்துக்கு வர்றதே இல்லையாம். இதுல குறிப்பாக சொல்லணும்னா பட்டு நகரத்துல இருக்குற ஈஸ்ட் பிளாக்ல இருக்குற தலைமை ஆபிசர்ஸ் 2 பேரும் ஆபிசுக்கு எப்ப வர்றாங்க, எப்ப போறாங்கன்னே தெரியலையாம். ஊர் ஆட்சிகள்ல ஏதாவது பிரச்னை, கோரிக்கைனு மக்கள் மனுகொடுக்க வந்தா? பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்குதாம். வளர்ச்சி திட்டங்களையும் சரியாக ஆய்வு செய்யறது இல்லையாம். ஆபிஸ் கார்ல போனா.. எங்க பேறாங்கன்னு தெரிஞ்சுடும்னு, ஆபிஸ் காரையும் யூஸ் பண்றதில்லையாம். சொந்த கார்களையேத்தான் பயன்படுத்துறாங்களாம். ஆனா, ஒப்பந்ததாரர்களுக்கு பில் பாஸ் செய்யணும்னா மட்டும் கரெக்ட்டா வந்துடுறாங்களாம். ஏன்னா.. அதுல “சம்திங்” வருதாம். இதனால, அந்த விஷயத்துல மட்டும் கவனம் செலுத்துறாங்களாம். ஆண், பெண் 2 ஆபிசர்ஸ் நடவடிக்கையும் சரியில்லையாம். இதனால மாவட்ட ஹயர் ஆபிசர்ஸ் ஆய்வு செஞ்சி, நடவடிக்கை எடுக்கணும்னு, பாதிக்கப்படுற ஜனங்களோட புகார் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர், தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தூக்க சேலம் விஐபி ஸ்கெட்ச் போட்டிருக்கிறதா சொல்றாங்களே..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நெற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோர டெல்டா மாவட்டங்களில் சேலம் விஐபி அணியில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள், 2வது கட்ட நிர்வாகிகளை இழுப்பதற்கான முயற்சியில் இருவரும் இறங்கியுள்ளனர். இதற்காக அவரது பொறுப்பாளர்களுக்கு பிளான் போட்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து 2 அணியில் உள்ள பொறுப்பாளர்கள் அதற்கான திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் வெளியில் கசிந்ததால் சேலம் விஐபி கவனத்துக்கு சென்றது. இதில் உச்சகட்ட டென்சனுக்கு சென்ற சேலம் விஐபி, மலைக்கோட்டை, மன்னர், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட டெல்டாவில் குக்கர் மற்றும் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்காக ‘விட்டமின் ப’ இறைக்கவும் முடிவு செய்து அதற்கான மாஸ்டர் பிளான் போட்டு மாஜி அமைச்சர்களிடம் ஒப்படைத்துள்ளாராம்… இந்த மாஸ்டர் பிளான் படி மாஜி அமைச்சர்கள் திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளனர். விரைவில், உடன்பாடு ஏற்பட்டதும் முக்கிய நிர்வாகிகள் சேலம் விஐபி அணிக்கு தாவ இருப்பதா இலை கட்சிக்குள் அரசல் புரசலாக பேசிகிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post காலும் வலிக்குது லீவும் கெடைக்கல என சேலம்காரர் புலம்புவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : saylamgarh ,Peter ,Leaf Party ,Cal Aching Lee ,Salemgarr ,Kedaikala ,Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...