×

மேட்டுப்பாளையம் அருகே யானைகள் கூட்டத்தை அச்சுறுத்தும் வகையில் பஸ்சை இயக்கிய டிரைவர்: வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே யானை கூட்டத்தை அச்சுறுத்தும் வகையில் பஸ்சை இயக்கிய டிரைவருக்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் வழியில் கெத்தை சாலை உள்ளது. இருபுறமும் அடர்ந்த வனத்தின் வழியே செல்லும் இச்சாலையை வனவிலங்குகள் கடந்து செல்வது அடிக்கடி நடைபெறும். எனவே, இவ்வழியே வாகனங்கள் மிதமான வேகத்திலும், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் இயக்கப்பட வேண்டும் எனவும், யானைகளை கண்டால் அவை கடந்து செல்லும் வரை வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பாக இயக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இச்சாலை வழியே நேற்று முன்தினம் பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இரு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் கொண்ட கூட்டமொன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் யானைகளை நோக்கி அவைகளை அச்சுறுத்தி விரட்டும் வகையில் இயக்கியபடி இருந்தார். இதனால் குறுகிய சாலையின் இருபுறமும் இறங்கி செல்ல வழியில்லாமல் ஓடிய யானைக்கூட்டம் பின்னர் ஓரிடத்தில் சாலையோரம் நெருக்கியடித்து நின்று பஸ்சுக்கு வழிவிட்டன. அப்போதும், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் யானைகளை கடந்து சென்றார்.

இதுகுறித்த வீடியோவினை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், வனப்பகுதி வழியாக வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது நின்று பார்த்து கவனமாக செல்ல வேண்டும். அதனையும் மீறி அரசு பஸ் டிரைவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது ஆபத்தானது. இது பயணிகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது, என்றார்.

The post மேட்டுப்பாளையம் அருகே யானைகள் கூட்டத்தை அச்சுறுத்தும் வகையில் பஸ்சை இயக்கிய டிரைவர்: வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Madupalayam ,Mattupalayam ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இருந்து...