×

நெரிசலால் திணறும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்கள்: மெகா சிட்டிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 7 தொழில்நுட்பங்கள்; நவீன போக்குவரத்தில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் நிலை என்ன?

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையைில் இந்தியாவின் நிலை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பெரும் நகரங்களின் வேகமான வளர்ச்சியால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வாகன நெரிசலுக்கு மத்தியில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், மின்சார ரயில் தடங்கள், மெட்ரோ ரயில்களின் தடங்கள் போன்றவை நகர போக்குவரத்திற்கு சவாலாக உள்ளன. ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்பட உலகம் முழுவதும் உள்ள நவீன நகரங்களில் போக்குவரத்து வசதிகளும், கட்டமைப்புகளும் வேகமாக மாறி வருகின்றன.

இந்தியாவை பொருத்தமட்டில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் வேகமாகி வரும் நிலையில், கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரும் நகரங்களாக மாறி வருகின்றன. வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்கின்றனர். அடுத்த 30 ஆண்டுகளில் நகரங்களின் மக்கள்தொகை பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2050ம் ஆண்டுக்குள், உலக மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்றும், இது இன்றைய உலக மக்கள் தொகையில் 54 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் ஜப்பானின் டோக்கியோ, இந்தியாவின் டெல்லி உட்பட உலகம் முழுவதும் 33 மெகாசிட்டிகள் உள்ளன. ஆனால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த மெகா சிட்டிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளுது. ஒன்றிய அரசின் மதிப்பீட்டின்படி, 2050ம் ஆண்டுக்குள் 85 முதல் 90 கோடி மக்கள் இந்திய நகரங்களில் வசிப்பார்கள். இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்கு ஏற்பட நகரத்தை விரிவுபடுத்த முடியாது அல்லது சாலையில் செல்வோரை தடுக்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், போக்குவரத்து அமைப்பில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்தால் மட்டுமே நகரங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எனவே நவீன போக்குவரத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நகரங்களில் போக்கவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலும் கூட, அந்த நகரங்களை காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க வேண்டும். பயண வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதனால் போக்குவரத்து அமைப்பில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. மேலும் இந்த சிக்கல்களை சமாளிக்க, மிக நவீன ெதாழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் பாட் டாக்ஸி, பறக்கும் டாக்சி, மாக்லேவ் ரயில், ஹைப்பர்லூப் போன்ற 7 தொழில்நுட்பங்கள் தான் நகர்ப்புற போக்குவரத்தின் எதிர்காலம் என்று கணிக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள், பயன்கள் குறித்து அறிவோம்.

1. பாட் டாக்ஸி
இந்தியாவில் முதன்முறையாக டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா நகரில் ‘பாட் டாக்ஸி’களை இயக்கும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டம் என்சிஆர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஜெவார் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும். இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் தயாரித்துள்ள திட்டத்தின்படி, 14.6 கி.மீ. தூரம் அளவிற்கு பயணிக்க முடியும் 12 நிறுத்தங்களை கொண்டிருக்கும். தினமும் 37 ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும். லண்டன், அபுதாபி போன்ற 5 நகரங்களில் பாட் டாக்ஸிகள் நடைமுறையில் உள்ளன. பாட் டாக்ஸி என்பது டிரைவர் இல்லாமல் இயக்கப்படும், எலக்ட்ரிக் கார் போன்றது. தானியங்கி வசதிகளுடன் இயங்கும். மிக அதிக வேகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மக்களை கொண்டு செல்லும். ஒரு பாட் டாக்ஸியில் 8 பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம், 13 பேர் நின்று கொண்டு பயணிக்கலாம். சென்சார் தொழில்நுட்பத்தின் இயக்கப்படும் பாட் டாக்ஸியானது மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இந்த போக்குவரத்தால் விபத்துகளைக் குறைக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்கின்றனர்.

2. பறக்கும் டாக்ஸி
திரைப்படங்களில் காண்பிக்கப்படும் பறக்கும் கார்களை போன்றது. பறக்கும் டாக்ஸியை முன்பதிவு செய்தால், அந்த டாக்ஸியானது வீட்டின் மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் வந்து தரையிறங்கும். அங்கிருந்து நம்மை ஏற்றிக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தில் சில ெநாடிகளில் கொண்டு சேர்க்கும். உலகளவில் சுமார் 20 நிறுவனங்கள் பறக்கும் டாக்ஸியின் முன்மாதிரி திட்டங்களை வழங்கியுள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி ‘மேட் இன் இந்தியா’-வும் பறக்கும் டாக்ஸி மாடலில் களமிறங்கியுள்ளது.

அமெரிக்காவின் பல நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட பல நகரங்களிலும், பறக்கும் டாக்ஸிகளை இயக்குவதற்கான முன்மொழிவுகளை சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இந்தியாவில் அடுத்தாண்டு இறுதிக்குள் நாட்டின் முதல் பறக்கும் டாக்ஸியைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. முன்மாதிரி திட்டமாக இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸியை செயல்படுத்தி காட்டியது. பறக்கும் டாக்ஸியானது, கார்களை விட 10 மடங்கு வேகத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 600 மைல் வேகத்தில் ெசல்லும். விமானம் போல நீண்ட தூரம் பயணிக்க கூடியது.

3. டிரைவர் இல்லாத கார்கள்
ஓட்டுநர் இல்லாத கார்கள் என்றால் அவற்றை ஓட்டுவதற்கு மனிதர்கள் தேவையில்லை. அதாவது, தானியங்கி முறையில் இயங்கும் இத்தகைய கார்கள், சாலை சிக்னல்களை ஆட்டோ பைலட் முறையில் புரிந்துகொண்டு, தாங்களாகவே சாலை விதிகளை பின்பற்றி செல்லும். சென்சார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வகை கார்கள் இயங்கும். செயற்கை தொழில்நுட்பம் மூலம் சென்சார், கேமரா, நேவிகேஷன், ஹைடெக் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் இயங்கும். டெஸ்லா, ஆடி, வோக்ஸ்வேகன் போன்ற நிறுவனங்கள் ஆட்டோபைலட் கார்களின் தொழில்நுட்பத்தில் வேலை செய்கின்றன.

பிரிட்டன், அமெரிக்கா, நார்வே போன்ற வளர்ந்த நாடுகளைத் தவிர, சீனா போன்ற ஹைடெக் நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் டிரைவர் இல்லாத கார்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்தியா போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் அமலுக்கு வரவில்லை. இருப்பினும், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள், ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் டிரைவர் இல்லாத கார்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.

4. மாக்லேவ் ரயில்
உலக ரயில் போக்குவரத்தின் அதிசயமாக ‘மாக்லேவ்’ ரயில்கள் பார்க்கப்படுகின்றன. மாக்லேவ் ரயில்கள் தொழில்நுட்பமானது புல்லட் ரயில்களுக்கு முந்திய தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தின் விசேஷம் என்னவென்றால், இந்த வகை ரயில்களில் சக்கரங்கள் இருக்காது. அதற்கு மாறாக ‘மேக்னைட் லெவிடேஷன்’ முறையில், அதாவது மாக்லேவுடன் இயங்குகிறது. இந்த நுட்பத்தில், தண்டவாளத்தில் இருந்து பெறப்படும் காந்த புலத்தின் சக்தியுடன் இயக்கப்படுகிறது.

கிட்டத்திட்ட தண்டவாளங்களுக்கும் ரயிலுக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கும். சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மாக்லேவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மணிக்கு 500 முதல் 600 கிலோமீட்டர் வேகம் வரை மாக்லேவ் ரயில்கள் இயக்கப்படுகிறது. புல்லட் ரயில்களை பொருத்தமட்டில் மணிக்கு 300 முதல் 400 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. அதே சமயம் மாக்லேவ் ரயில்கள் மணிக்கு 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும். புல்லட் ரயில்கள் தண்டவாளத்தில் ஓடும். மாக்லேவ் ரயில்கள் தண்டவாளத்தில் மேல் காந்த புலத்தின் ஈர்ப்பு சக்தியின் மூலம் இயக்கப்படும்.

5. டெலிவரி ட்ரோன்
‘ட்ரோன்’ தொழில்நுட்பமானது இன்று அத்தியாவசியமாகி வருகிறது. உலகின் பெரிய நிறுவனங்கள் கூட இன்று டெலிவரிகளை ட்ரோன்கள் மூலம் அனுப்பி வருகின்றன. அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் தொலைதூர இடங்களுக்கு அல்லது விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்களுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகின்றன. மருந்து, அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் சப்ளைக்கு டெலிவரி ட்ரோன்கள் பயன்படுத்துகின்றன. இருந்தாலும் இந்தியாவில் டோர் டெலிவரி ட்ரோன்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி நிறுவனம், உணவு ஆர்டர்கள் மற்றும் மளிகைப் பொருட்களை ட்ரோன் மூலம் டெலிவரி செய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளது.

6. நிலத்தடி சாலைகள்
பெரும்பாலான நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் கார்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 2040ம் ஆண்டுக்குள் சுமார் 200 கோடி கார்கள் சாலைகளில் இருக்கும் என்றும், அதன் மூலம் சாலை போக்குவரத்து 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நிலத்திற்கு அடியில் சாலையமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். இந்த போக்குவரத்து மூலம் மழை, வெயில் காலங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. நிலத்தடி சாலையின் மூலம் போக்குவரத்து வேகத்தை அதிகரிக்க முடியும் என்று எலோன் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். ஆனால் இதுவரை நிலத்தடி சாலைகள் திட்டம் அமலுக்கு வரவில்லை.

7. ஹைப்பர்லூப் ரயில்கள்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், கடந்த 2012ம் ஆண்டில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப யோசனையை முன்வைத்தார். இந்த தொழில்நுட்ப முறையானது, ராட்சத குழாயின் உள்ளே ரயில்கள் இயக்கப்படும். குழாயின் உள்ளே மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் ெசல்ல முடியும் என்கிறார். இந்தியா உட்பட பல நாடுகளில் ஹைப்பர்லூப் ரயில்கள் இயக்குவதற்காக சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பமானது, சாதாரண ரயில்களை போல் அல்லாமல், இரண்டு மின்காந்த மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகிறது. அதனால் அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

ஹைப்பர்லூப் ரயில்கள் விமானத்தை விட வேகமாக இயக்கப்படும் என்பதால், இந்த தொழில்நுட்பம் குறித்த ஆலோசனைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஹைப்பர்லூப் ரயில்கள் இயக்குவதற்காகன வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மும்பையில் இருந்து புனே வரை ஹைப்பர்லூப் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் சேவை தொடங்கினால், மும்பை – புனே இடையேயான தூரத்தை 25 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது இரண்டரை மணி நேரம் வரை ரயிலில் செல்ல வேண்டும்.

The post நெரிசலால் திணறும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்கள்: மெகா சிட்டிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 7 தொழில்நுட்பங்கள்; நவீன போக்குவரத்தில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் நிலை என்ன? appeared first on Dinakaran.

Tags : Delhi ,Mumbai ,Chennai ,India ,New Delhi ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு