×

தமிழ்நாடு பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

மதுரை: மதுரை சிறையில் உள்ள பாஜக நிர்வாகி சூர்யா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். எஸ்.ஜி. சூர்யா, அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். மேலும், பாஜ சார்பில் ஊடக விவாதங்களிலும் சூர்யா பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து டிவிட்டரில் எஸ்.ஜி.சூர்யா ஒரு தகவல் பதிவிட்டிருந்தார். அதில், ‘‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’’ என பதிவிட்டிருந்தார்.

மேலும், ‘எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜ அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்தி கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே’ என சு.வெங்கடேசனை விமர்சித்திருந்தார் எஸ்.ஜி.சூர்யா. இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக மதுரை சைபர் கிரைம் போலீசார், 16ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் சென்னை, தி.நகரில் எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

எஸ்.ஜி.சூர்யா மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவரை மதுரை முதலாவது விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமசங்கரன் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சூரியாவை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஜாமீன் கோரி சூர்யா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

The post தமிழ்நாடு பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,State Secretary ,SG Surya ,Madurai ,Surya ,Madurai Jail ,Tamil Nadu BJP… ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...