×

லலிதா சஹஸ்ரநாமத்தை உரை செய்த சான்றோர்கள்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 4

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

தஞ்சையை ஆண்ட போஸல (போஸ்லே) அரசர் ஸ்ரீ பாஸ்கரராயரை அழைத்தார். அதன்படி தஞ்சைக்கு வந்த பாஸ்கரராயருக்கு தஞ்சைக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தையே இனாமாகக் கொடுத்தார். அதன்பிறகு கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவாலங்காட்டிற்கு வந்தார். அங்கிருந்த தன்னுடைய தர்க்க சாஸ்திர பண்டிதரான கங்காதர வாஜபேயியை சந்தித்தார். பிறகு அருகேயே காவிரிக் கரைக்கருகே பாஸ்கரராஜபுரம் என்கிற அழகிய கிராமத்தை நிர்மாணித்தார். இன்றும் அந்த கிராமம் பாஸ்கரராஜபுரம் என்று அழைக்கப்படுகின்றது.

சிலகாலம் கழித்து கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மத்யார்ஜுனம் என்ற அழைக்கப்படும் திருவிடைமருதூருக்கு வந்தார். அங்குள்ள மஹாதானத் தெருவில் வசிக்கத் தொடங்கினார். மாலை வேளையில் தன் வீட்டுத் திண்ணையிலுள்ள தூணின் மீது காலைத் தூக்கி வைத்தபடி சாய்மானமாக அமர்ந்திருப்பார். அப்போது, வேப்பத்தூர் என்கிற பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு சந்நியாசி மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அந்த வழியாகப் போவது வழக்கம். அப்படிச் செல்லும்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.

ஸ்ரீபாஸ்கரராயரோ அந்த சந்நியாசியை கண்டு கொள்வதே இல்லை. ஒருநாள் அந்தத் துறவியும் பாஸ்கரராயரும் பிரதோஷ காலத்தில் தற்செயலாக எதிரெதிராக சந்தித்துக் கொள்ள நேர்ந்தது. அப்போது அங்கிருந்த ஜனங்கள் முன்னிலையில் அந்த சந்நியாசி பாஸ்கரராயரை இழிவாகப் பேசினார். அதாவது தான் அந்தத் தெரு வழியாகப் போகும்போது வேண்டுமென்றே இவர் அமர்ந்திருப்பார். மரியாதை கொடுக்கத் தெரியாதவர் என்றெல்லாம் பேசினார்.

பாஸ்கரராயர் சந்நியாசியை நிமிர்ந்து பார்த்தார். ‘‘சுவாமிகளே… இல்லற தர்மத்தின்படி நான் உங்களை வணங்கியிருந்தால் உங்களின் சிரம் வெடித்திருக்கும். உங்களை காப்பாற்றவே நான் வணங்கவில்லை’’ என்றார். அதோடு மட்டுமில்லாமல் அந்த சந்நியாசியின் தண்டம், கமண்டலம் இவற்றை ஒரு ஓரமாக வைத்தார். மெதுவாக அதை வணங்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சட்டென்று அந்த தண்ட, கமண்டலங்கள் வெடித்துச் சிதறின.

அந்தக் கணமே அந்த சந்நியாசி மன்னிப்பு கோரினார். அன்றிலிருந்து அந்தச் சந்நியாசி தெருவில் செல்லும்போதெல்லாம் பாஸ்கரராயர் வீட்டிற்குள் சென்று விடுவாராம். இப்பேற்பட்ட சக்தி அவருக்கு வந்ததன் காரணம் என்னவெனில் ஸ்ரீமகாஷோடச நியாசமே ஆகும். இந்த நியாசம் என்கிற அந்த தெய்வத்தை தன்னுள்ளே பொருத்திக் கொள்ளும் மாபெரும் வழிமுறையை அறிந்திருந்தார்.

அவ்வாறு விடாது செய்து வருபவர்கள் அர்த்தநாரீஸ்வர சொரூபமாக ஆகிவிடுகிறார்கள். பாபாஸ்கரராயர் மீமாம்ஸை, வேதாந்தம், நியாயம், மந்திர சாஸ்திரம் என்று பல விஷயங்களை கொண்டு ஏறத்தாழ 42 முக்கிய நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாது பல்வேறு ஆலயங்களை நிர்மாணித்து அங்கு நடக்க வேண்டிய பூஜை முறைகளையும் நெறிப்படுத்திக் கொடுத்தார். காசியில் ஸ்ரீசக்ரேஸ்வரர் ஆலயத்தையும், மூலஹ்ரதத்தில் ஸ்ரீபாண்டுரங்க சுவாமி கோயிலும், கொங்கணத்தில் ஸ்ரீகம்பீரநாத சுவாமி ஆலயம், ராமேஸ்வரத்தில் ஸ்ரீவஜ்ரேஸ்வரர் ஆலயம், ஸம்நதி என்ற தலத்தில் தன் குல தெய்வமான சந்திர லம்பாதேவியின் ஆலயத்தை ஸ்ரீசக்ர வடிவத்தில் அமைத்தார்.

கேரளத்தில் ஸ்ரீகஹோளேஸ்வரர் கோயிலையும் அமைத்தார். இவரது காலத்திற்குப் பிறகு இவரது மனைவியான பத்மாவதி அவர்கள் காவிரிக் கரைக்கு அருகே பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் ஆலயத்தை அமைத்தார்கள்.பாஸ்கரராயர் திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மூகாம்பிகையையும் ஸ்ரீமேருவையும் பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீபாஸ்கரராய தீட்சித பாரதி என்கிற மகான் தனது 95 வயதில் தன்னுடைய பூத உடலை நீத்தார். இவரால்தான் லலிதா சகஸ்ரநாமத்திற்கு அழகான விளக்கவுரை எழுதப்பட்டது.

இவரது சரித்திரத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்ளாமல் லலிதா சஹஸ்ரநாமத்திற்குள் நாம் புக முடியாது. இதுதவிர லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யங்கள் என்றழைக்கப்படும் உரையை பல்வேறு மகான்களும் எழுதியுள்ளனர். விமர்சாநந்தீயம் என்று ஒரு உரைக்குப் பெயர். இது ஸ்ரீமத் விமலாநந்தநாதரின் சிஷ்யராகும் விமர்சாநந்தநாதரால் இயற்றப்பட்டதாகும். இது அச்சில் இல்லை.

இரண்டாவதாக ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளது பாஷ்யம். காஷ்மீர தேசத்தில் ஜம்மு என்னும் நகரத்துப் புத்தக சாலையில் இருக்கின்றது. மூன்றாவதாக, ஸ்ரீமத் பட்ட நாராயணரால் இயற்றப்பட்டதொன்றும் இருக்கின்றது. நான்காவதாக, ஸ்ரீசங்கர பரம்பரையில் வந்த ஒரு சங்கராசார்யாள் இயற்றியது. ஐந்தாவததாக ஸ்ரீபாஸுரானந்த நாதர் என்கிற ஸ்ரீபாஸ்கரராயரால் இயற்றப்பட்டது ஒன்று. இந்த உரைதான் தற்காலத்தில் சிறந்து விளங்குகிறது. இதற்கு இணையான வேறொரு உரை இல்லை
என்பார்கள்.

ஸ்ரீபாஸ்கரராயரால் இயற்றப்பட்ட வடமொழி பாஷ்யத்தைத் தமிழில் மொழி பெயர்த்து இந்த தமிழ் உலகத்திற்கு உதவியர் ஸ்ரீமான் G.V. கணேசய்யர் அவர்கள். B.A., B.L., ஆவர். இவரே, ஜகத்குரு ஸ்ரீ சங்கரபகவத் பாதாள் அவர்களால் இயற்றப்பட்ட சௌந்தர்ய லஹரியின் லக்ஷ்மீதரர் வியாக்கியானத்திற்கு சிறந்த தமிழ் உரையை இயற்றி வெளியிட்டுள்ளார்.

இந்த லலிதா சகஸ்ரநாமத்தில் எந்தெந்த விதங்களில் அதாவது எந்தெந்த தத்துவம் கூறும் அமைப்பில் நாமங்கள் அமைந்துள்ளன என்று பார்ப்போமா! முதலில் அத்வைத சாஸ்திர சம்பந்தமான நாமாக்கள் ரத்னம் போன்று ஜொலிப்பதை பார்ப்போம்.

அமேயா, அஜா, ஆத்ம வித்யா, ஏகாகினீ, அந்தர்முக ஸமாராத்யா, கேவலா, கூடஸ்த்தா, குணாதீதா, சின்மயீ, சிதி, சிதேகரஸ ரூபிணி, சித்சக்தி, சேதனாரூபா, க்ஞானவிக்ரஹா, தத்பதலக்ஷ்யார்த்தா, தத், த்வம், அயீ, த்வைத வர்ஜிதா, தேசகாலாபரிச்சின்னா, நிராதாரா, நைஷ்கர்ம்யா, பரா, பிரஹ்மரூபா, பிரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ, பூமரூபா, மோஹநாசினீ, மித்யாஜகததிஷ்டானா, முக்திதா, முக்தி நிலயா, வேத வேத்யா, வ்யாபினீ, சிவா, ஸ்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜதூளிகா, சிவங்கரீ, ஸரஸ்வதி, ஸத்யாநந்த ஸ்வரூபிணீ, ஸச்சிதாநந்த ரூபிணீ, ஸ்ர்வோபநிஷதுத்குஷ்டா முதலியனவாகும்.

மந்த்ர சாஸ்திரத்தித்திற்கும் ஸ்ரீவித்யைக்கும் சம்பந்தப்பட்ட நாமாக்களாக கீழேயுள்ள நாமாக்கள் விளங்குகின்றன. அகுலா, ஆதிசக்தி, இச்சாசக்தி, க்ஞானசக்திக் கிரியாசக்திஸ்வரூபிணீ, ஈ, உமா, ஒட்யாணபீடநிலயா, கதம்பவனவாஸிநீ, காமாக்ஷீ, கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா, காமேஸ்வர முகாலோக கல்பிதஸ்ரீ கணேஸ்வரா, கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி, காமஸ்வராக்னி, நிர்த்தக்த ஸபண்டாஸுர ஸக்யகா முதலிய நாமங்கள் லலிதோபாக்யானம், தேவீபாகவதம் முதலியவற்றிற்குச் சம்பந்தப்பட்ட நாமாக்கள், குருமண்டல ரூபிணீ, குருப்ரியா, மநுவித்யா, சந்த்ர வித்யா, சித்கலா, க்ஞானமுத்ரா, ஞானஞேய ஸ்வரூபிணீ, தத்வாஸனா, த்ரிகோணாந்தர தீபிகா, த்ரிகண்டேசீ, த்ரிகோணகா, பஞ்சப்ரேதாஸநாஸீநா, பஞ்சக்ருத்ய பராயணா, ப்ரதிபன் முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா, பாசஹஸ்தா, பஞ்சஸங்க்யோபசாரிணீ, பிஸதந்துதநீயஸீ, பிந்துமண்டல வாஸினீ, பலிப்ரியா, பிந்துதர்ப்பண ஸந்துஷ்டா, பகமாலினீ, மஹாதந்த்ரா, மஹாமந்த்ரா, மஹாயந்த்ரா, மஹாயாக க்ரமா ராத்யா, மேரு நிலயா, மந்த்ரஸாரா, ரஹஸ்தர்ப்பண தர்ப்பிதா, விமர்சரூபிணி, வீரமாதா, ஸ்ரீவித்யா, ஸ்ரீஷோடாசாக்ஷரீ வித்யா, ஸ்ரீசக்ரராஜநிலயா, ஸர்வமந்த்ரஸ்வரூபிணீ, ஸாமரஸ்ய பராயணா போன்றவை ஸ்ரீவித்யா நாமங்களாகும்.

சமயங்களை குறித்துக் கூறும், ஸமயாந்தஸ்தா, ஸமயாசார தத்பார முதலிய நாமாக்களும் b) கௌலமதத்தைக் கூறும் கௌளமார்க்க தத்பர ஸேவிதா, குலேஸ்வரீ, குலஸங்கேத பாலினீ குலாம்ருதைக ரஸிகா முதலியனவும் இதில் அடங்கியிருக்கின்றன. யோக சம்மந்தப்பட்ட நாமங்களாக, மூலாதாரைக நிலயா, ப்ரஹ்மக்கிரந்தி விபேதினீ, 101 முதல் 110 வரையிலுள்ள நாமாக்கள். விசுத்தி சக்ரநிலயா முதல் 62 நாமாக்கள் யோகினீ ந்யாஸக் கிரமமாயுள்ளன. யோகினீ, யோகதா, யோக்யா, யோகாநந்தா முதலியவை ஆகும். மேலேயுள்ள 101வதாக உள்ள மணிபூராந்தருதிதா என்னும் நாமமானது பாவனா யோகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதில் குண்டலினீ சக்தியை குறித்தும், அந்தந்த சக்கரங்களின் சுழற்சியும் கூறப்பட்டுள்ளன.

பக்தி கம்யா, பக்தி வச்யா, பக்த ஸௌபாக்ய தாயினீ, பக்திப்ரியா, க்ஷிப்ரப்ரஸாதினீ, பக்த சித்த கேகீ கநா கநா, நாமபாராயண ப்ரீதா, லோபாமுத்ரார்ச்சிதா, த்யான கம்யா, புலோமஜார்ச்சிதா, வரதா, காமபூஜிதா முதலிய நாமாக்கள் உபாசகர்களுக்கு உதவும் விதமாகவும் பக்தி சாஸ்திர விதமாகவும் அமைந்துள்ளன.
கர்ம காண்டம் தொடர்பாக நாமங்களையும் பார்ப்போம். அவை க்ருதக்ஞா, சிஷ்டேஷ்டா, சிஷ்டபூஜிதா, ஸ்வாஹா, ஸ்வதா, சுபகரீ, ஸாம்பாஜ்ய தாயினீ, தீக்ஷிதா, யக்ஞரூபா, யக்ஞப்பியா, யக்ஞகர்த்தீ, பஜமானஸ்வரூபிணீ, தர்மாதாரா, வர்ணாச்ரம் விதாயினீ, முதலியனவாம்.

அதாவது லலிதா சகஸ்ரநாமத்தில் இல்லாத ஆத்மீக விஷயங்களைக் குறித்த நுட்பங்கள் நாமங்களாக அமைந்துள்ளன. இந்த ஆயிரம் நாமங்களும் மந்திரார்த்தம் மிக்கவை. ஆதலால், ஒவ்வொரு மந்திரமும் இத்தனை இத்தனை எழுத்துக்களோடு கூடியவை என்று சூத்திரங்கள் கூறுகின்றன. இவ்வாறு நிச்சியிப்பதோடு மட்டுமின்றி அதன் வரிசைக் கிரமமும் குறிப்பிடப்படுகின்றன. ஆதலால், நாமங்களின் வரிசைக் கிரமத்தை மாற்றவோ, அல்லது புது நாமாக்களை நுழைக்கவோ அல்லது உள்ள நாமாக்களை வேறுவிதமாய் மாற்றவோ சற்றும் முடியாது.

மந்திர சொரூபமாக உள்ள ஒவ்வொரு நாமாவும், பக்தியோடு ஜபம் செய்பவர்க்கு பயனை அளிக்கின்றது. இந்த ஆயிரம் நாமாக்கள் அடங்கிய முழு ஸ்தோத்திரத்தை எல்லோரும் படிக்கலாம். பாராயணமாகச் சொல்லலாம். அடுத்த இதழிலிருந்து ஆயிரம் நாமங்களுக்கும் என்னென்ன பொருள் என்று பார்க்கப் போகிறோம்.அதன் தத்துவ அர்த்தங்கள் மற்றும் பக்தி, யோகம் என்று எல்லா விதங்களிலும் பார்க்க இருக்கின்றோம்.

The post லலிதா சஹஸ்ரநாமத்தை உரை செய்த சான்றோர்கள் appeared first on Dinakaran.

Tags : Lalitha Sahasranama ,Lalita Sahasranamam ,Ramya Vasudevan ,
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்