×

திருச்செந்தூரில் ஆதார் கார்டு தவறுகளை திருத்த இளைஞரை அலைக்கழிக்கும் சேவைமையம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆதார் கார்டு தவறுகளை திருத்தாமல் இளைஞரை அலையவிட்ட தாலுகா ஆபீஸ் சேவை மையத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் தன்னுடைய மகனின் ஆதாரை புதுப்பிக்க, திருச்செந்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்றார். அங்கு மகனின் ஆதார் கார்டை புதுப்பிக்க மனு கொடுத்து, அந்த புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு மே மாதம் வந்தது. அதில் பெயர் மற்றும் பிறந்த ஆண்டு தவறாக இருந்தது. அதை திருத்துவதற்காக அந்த இளைஞர் மீண்டும் அந்த ஆதார் சேவை மையத்திற்கு சென்றார். அங்குள்ள பெண் ஊழியரிடம், ‘‘பழைய ஆதார் அட்டையில் பெயரும், பிறந்த ஆண்டும் சரியாக உள்ளது. புதிதாக வந்த ஆதார் கார்டில் இந்த இரண்டும் தவறாக உள்ளது. எனவே அதை திருத்தித்தாருங்கள்.’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த பெண் ஊழியர், ‘‘உங்கள் மகனுக்கு இருப்பிட சான்றிதழ் இருந்தால் தான் திருத்த முடியும். எனவே இருப்பிட சான்றிதழ் வாங்கி வாருங்கள்’’ என்று கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர், ‘‘என்னிடம் மகனின் பிறப்பு சான்றிதழ் மட்டும் தான் உள்ளது; அதை வைத்து சரி செய்து தாருங்கள்’’ என்று கூறியுள்ளார். அதற்கு அந்த ஊழியர், ‘‘இதை வைத்து சரி செய்ய முடியாது. உங்கள் மகனின் சாதி சான்றிதழ் வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு இளைஞர், தனது மகனின் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழை கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் ஊழியர், ‘எஸ்சி/எஸ்டி சான்றிதழ் தான் வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், புதிய ஐடி கார்டு வேண்டும் என்று கேட்டு, இளைஞரை அலைக்கழித்துள்ளார். பழைய ஆதார் கார்டில் பிறந்த தேதியும், பெயரும் சரியாகத்தானே உள்ளது என்று இளைஞர் கேட்டதற்கு, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பதில் கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலைக்கழிக்கப்பட்ட இளைஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post திருச்செந்தூரில் ஆதார் கார்டு தவறுகளை திருத்த இளைஞரை அலைக்கழிக்கும் சேவைமையம் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Thaluka Office Service Centre ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்