×

சென்னையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிமீறியவர்களிடம் ரூ.8.42 கோடி அபராதம் வசூல்: 1.99 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு

 

சென்னை, ஜூன் 19: சென்னையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நிலுவையில் இருந்த 1,99,983 வழக்குகள் போக்குவரத்து போலீசார் முடித்து வைத்து வைத்து, அபராதமாக ரூ.8.42 கோடி வசூலித்துள்ளனர். சென்னையை விபத்து இல்லா மாநகரமாக்கும் வகையில் மாநகர காவல்துறையினர் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் 156 இடங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்கின்றனர்.

அதன்படி சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது, எல்லை கோட்டை தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், அபராதம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்க, 10 போக்குவரத்து கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டி, ஆன்லைன் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த கடந்த 14, 15, 17ம் தேதிகளில் சென்னை முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 126 வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,737 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பிறகு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இணையதளம் வாயிலாக 45 லட்சத்து 3 ஆயிரத்து 670 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 மாதங்களில் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 1,99,983 வழக்குகளை சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதன்படி சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதமாக ரூ.8.42 கோடியை போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர்.

* போதையில் வாகனம் ஓட்டியதாக ரூ.14.64 கோடி அபராதம் வசூல்
சென்னையை விபத்து இல்லா மாநகரமாக்கும் வகையில் மாநகர காவல்துறையினர் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி, சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த நபர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, சென்னை முழுவதும் கடந்த 17ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் நிலுவையில் இருந்த 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராதமாக 53 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 5 மாதங்களில் போதையில் வாகனம் ஓட்டிய 14,158 பேரிடம் அபராதமாக 14 கோடியே 64 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிமீறியவர்களிடம் ரூ.8.42 கோடி அபராதம் வசூல்: 1.99 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…